பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாஷா கவிசேகர மகாவித்துவான் ரா.இராகவையங்கார் சுவாமிகள் ♦ 45


மற்றொருவர் உலகம் முழுவதும் போற்றும் மாபெரும் அரசியல்வாதி, துணைவேந்தர் மகாகனம் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார் அவர்கள்- இந்த இரண்டு மேதைகளும் கண்ணீர் பெருகப் பாரதியின் பாடல்களைக் கேட்டது எனக்கு வியப்பைத் தந்தது.

1988இல் பாரதியின் நாட்டுப் பாடல்கள் மட்டும்தான் மக்களால் ஓரளவு அறியப்பெற்றிருந்தன. ஏனைய பாடல்கள் சிறுசிறு நூல்களாக வந்திருந்தபோதிலும் அவற்றை யாரும் விரும்பிப் படிப்பதில்லை. அன்றியும் அன்றைய தமிழ்ப்புலவர்கள் பாரதியை ஒரு கவிஞனாக நினைத்ததேயில்லை. மரபுக் கவிதைகளைத் தவிரப் பிறவற்றை அவர்கள் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் இப்பெருமக்கள் இருவரும் பாரதியின் பாடல்களை வழிந்தோடும் கண்ணீருடன் கேட்டது பெரு வியப்பைத் தந்தது. இரண்டு மாமனிதர்களைச் சந்தித்ததாக அன்று நான் புரிந்துகொள்ளவில்லை. அறுபது ஆண்டுகள் கழித்து இப்போது அதனை உணர்கின்றேன்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சுவாமிகள் இராமநாதபுரம் சமஸ்தானத்தில் அரசருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, நிகழ்ந்த பல சுவையான நிகழ்ச்சிகளை வகுப்பில் எங்களுக்கு எடுத்துக் கூறுவார். ‘சந்திரமதி புலம்பல்’ என்ற ஒரு நாட்டுப் பாடல் ’சின்னிப் பாட்டு’ என்ற பெயரில் அன்று வழக்கிலிருந்தது. ஒரு பெண் பொம்மை செய்து, அந்தப் பொம்மையின் இரண்டு கைகளையும் தங்களுடைய கட்டைவிரல், நடுவிரல் என்பவற்றை நுழைத்துக் கொண்டு ‘டப்டப்’ என்ற சத்தத்துடன் பாடுவதே சின்னிப் பாட்டாகும். இந்தப் பாடலையும் சுவாமிகள் மனப்பாடம் செய்துவைத்திருப்பார். ஒரு முறை பல தொடர்களை அதிலிருந்து பாடிக்காட்டினார்.