பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அதிலுள்ள,

சந்தனம் அளைந்த கையால் சாணி வாரக் காலமாச்சே
குங்குமம் அளைந்த கையால் குப்பை வாரக் காலமாச்சே

என்ற இரண்டு அடிகள் அன்று சுவாமிகள் பாடக் கேட்டது, இன்றும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை. குறுந்தொகைக்கு உரை எழுதக்கூடிய பேரறிஞர்கள் அன்று பலரிருந்தனர். ஆனால், குறுந்தொகைக்கு நுண்மையான உரையெழுதிய சுவாமிகள் அதே கையில் தாளம் போட்டுச் சின்னிப்பாட்டையும் பாடி ரசிக்கின்ற ஒருவராக அன்று கண்டேன். ஆம், அன்றைய தமிழறிஞருலகில் சுவாமிகள் தனித்தன்மையோடு விளங்கினார். அவர் திருவடிகளின் கீழிருந்து மூன்றாண்டுகள் படித்தமை என் தவப்பயனாகும்.


8. நாவலர் சோமசுந்தர பாரதியார்


அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்த 1935 முதல் 1940 வரையான காலப்பகுதியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர், நாவீறு படைத்த வழக்கறிஞர், நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களாவார். அவருடைய பெருமுயற்சியால்தான் இயற்பியல் துறையிலிருந்து தமிழ்த்துறைக்கு மாற்றப்பட்டேன்.

தொல்காப்பியம் முதல் பல இலக்கியங்களையும் பழுதறக் கற்றவர் பாரதியார். எந்த ஒன்றையும் உரையாசிரியர் வழிச் செல்லாமல் தம்முடைய நுண்மான் நுழைபுலம் கொண்டு சிந்தித்துப் பொருள் செய்பவர் நாவலர் அவர்கள். தொல்காப்பியத்தின் சில பகுதிகளுக்குப் புத்துரை கண்டதோடு, ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார்.