பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாவலர் சோமசுந்தர பாரதியார் ♦ 47



நான் படித்த காலத்தில் என் வகுப்பிற்குச் சிந்தாமணியும், புறநானூறும் பாடம் நடத்தினார். சிந்தாமணி உரையுடன் உள்ள பதிப்புத்தான் அன்று இருந்துவருகிறது. தடிமனான அட்டையிட்டுக் கட்டப்பட்டதும் 3½ அங்குலம் முதுகு உள்ளதுமாகிய அந்தப் பெருநூலைப் பிரித்து இரண்டாக மடித்து இடக் கையில் வைத்துக்கொண்டு, வலக் கையால் பேணி வளர்த்த தம் மீசையைக் கர்கர் என்ற ஒலியுண்டாகுமாறு திருகிக்கொண்டே பாடம் நடத்துவார். சிந்தாமணிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரை அன்றைய தமிழறிஞர் உலகம் ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்று பாராட்டியது. ஆனால், எங்கள் நாவலர் நச்சினார்க்குத் தந்த பட்டப்பெயர் என்ன தெரியுமா? ‘புளியோதரை மூட்டை’ என்பதாகும். பல இடங்களில் நச்சினார்க்கினியர் உரையை அக்கு வேறு ஆணி வேறாகக் கிழித்துவிடுவார். சில சமயங்களில் நச்சினார்க்கினியர் உரையை எடுத்துக் கொண்டு அது சரியே என்று வாதாடுவேன். அதனால் ‘நச்சினார்கினியர் வக்கீல்’ என்று எனக்குப் பெயர் தந்திருந்தார். இந்த நிலையிலும் அவருடைய பெருந் தன்மையை, விசாலமான மனப்பான்மையை, தேவை ஏற்பட்டால் எதிர்க்கட்சியையும் போற்றி ஏற்றுக் கொள்ளும் அவருடைய பண்பாட்டை என்னால் மறக்க முடியவில்லை. இதன் எதிராக, அவர்கள் கூறும் உரைக்கு மாறுபட்டு நாம் பேசினால், ஜென்மப் பகைவர்களாக நம்மைக் கருதிய ஓரிரு பேராசிரியர்களும் அன்றைய பல்கலைக்கழகத்தில் இருந்தனர். சொந்தமாகச் சிந்திக்கும் ஆற்றலில்லாமல், கிளிப்பிள்ளைபோல் அந்த உரையையே திருப்பிப் படிக்கும் இவர்களைப்பற்றியோ, இவர்கள் திருநாமங்களையோ குறிப்பிட விரும்பவில்லை. இவர்களால்தான் நாவலர் பாரதியாரின் பெருமை பளிச்சிட்டு நின்றது.