பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 ♦ நான் கண்ட பெரியவர்கள்



ஒருமுறை நாவலர் அவர்கட்கும் எனக்கும் கலித்தொகைப் பாட்டொன்றில் நச்சினார்க்கினியர் உரை பற்றிப் பெரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டது. ‘ஏஎ இஃதொத்தன் நாணிலன்’ (கலி.62) என்று தொடங்கும் குறிஞ்சிக்கலிப் பாடலைப் பெருந்திணை என்ற பிரிவில் அடக்கியிருந்தார் நச்சினார்க்கினியர். அது பெரும் தவறு என்றும், இது ‘அன்பினைந்திணை’யுள் இடம்பெற வேண்டுமே தவிரக் பெருந்திணையில் புகுத்துவது பெருந்தவறு என்பது என்னுடைய வாதம். திரு.நாவலர் அவர்கள் ‘நச்சினார்க்கினியர்க்கு வக்கீலாக இருந்த நீ இப்பொழுது அவரையே சாடுகிறாயே’ என்றார். பிறகு என் வாதங்களுக்குரிய காரணங்களைக் கூறினேன்.

குடத்து விளக்கேபோல்
கொம்பன்னார் காமம் வெளிப்படா

என்ற முத்தொள்ளாயிரப் பாடலையும்

விடுமின் எங்கள் துகில் விடுமின் எங்கள் துகில்
எனும்மென் குதலை மொழியில்
பிடிமின் எங்கள் துகில் எனும் பொருள் படமொழிவீர்

என்ற கலிங்கத்துப் பரணிக் கடைத் திறப்புப் பாடலையும் எடுத்துக் கூறி, மகளிர் ‘எம்மைத் தொடாதே’ என்று கூறினால், ‘எம்மை தொட்டுக் கொள்’ என்னும் பொருளிற் பேசுவது அவர்தம் இயற்கை என்று விளக்கினேன். இதேபோல மணமின்றி வாழ்ந்த முதலாம் எலிசபெத் அம்மையார், சூழ்ந்துள்ள பிரபுக்களில் குறிப்பாக ஒருவரைப் பேரைச் சொல்லி அழைத்து “இனி உம்முடைய பணி தேவையில்லை, நீர் போகலாம்” என்று கூறுவாரேயானால் அந்தப் பிரபு அன்றிரவு அரசிக்குத் துணையாக வரவேண்டும் என்ற பொருளில் பேசுவதாக நான் படித்துள்ளதையும் எடுத்துக் கூறினேன்.