பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஒரு தமிழாசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்த எனக்கு, இறைவன் எத்தனை வாய்ப்புகளைத் தந்து என்னை வளர்த்துள்ளான் என்பதை நினைக்கும்போது, அச்சம் கலந்த வியப்பு என்னை ஆட்கொள்கிறது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன் நினைத்துகூடப் பார்க்க முடியாத பெரியவர்களையும், மகான்களையும் அருகிற் சென்று பார்க்கும் வாய்ப்பு மட்டுமா தந்தான்? அவர்களோடு பேசவும், அவர்கள் எதிரே சொற்பொழிவாற்றவும், அவர்களுடைய ஆசிகளைப் பெறவும் அல்லவா வாய்ப்புகளைத் தந்தான்!

இந்நூலில் கூறப்பெற்றுள்ள மாமனிதர்கள், வரலாறு படைத்தவர்கள். அவர்கள் மாமனிதர்களாக ஆவதற்கு அவர்களின் துாய எண்ணமும் ஆயிரக்கணக்கான செயல்களும் துணைபுரிந்தன. பல்வேறு பரிமாணமுடைய இவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் மிகப் பெரிய வரலாற்று நூலே எழுதலாம். ஆனால், என்னுடைய நோக்கம் அதுவன்று. எவ்விதச் சிறப்பும் இல்லாத என்போன்ற ஒருவனிடம் இந்த மாமனிதர்கள் காட்டிய அன்பு, பரிவு, செய்த உபகாரம் என்பவற்றில் சிலவற்றை மட்டுமே இங்குக் குறித்துள்ளேன்.

இமயமலை தன்நிலையிலிருந்து இறங்கிவந்து ஒரு கடுகுக்கு உபகாரம் செய்வதுபோல் இந்தப் பெருமக்கள் என்ற சிறுவனுக்கு, இளைஞனுக்கு, நடுத்தர வயதுக்காரனுக்கு, வயது முதிர்ந்தோனுக்கு எவ்வளவு கருணை காட்டினார்கள்! எவ்வளவு உபகாரம் செய்தார்கள்! இந்தக் கிராமத்துச் சிறுவன், எண்பத்தைந்து வயதிலும் உலகைச் சுற்றிவரவும், முப்பத்தைந்துக்கும்