பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விபுலானந்த அடிகள் ♦ 51


மது அருந்திவிட்டார். மேடையில் வந்து நின்றவர் தனிப்பாடலிலுள்ள ‘ஆரார் தலை வணங்கார்?’ என்ற பாடலைப் பற்றிப் பேச முற்பட்டார். முடி திருத்துபவரைக் கம்பன் புகழ்ந்து பாடியதாகத் தனிப்பாடல் திரட்டில் இப்பாடல் அமைந்துள்ளது. பதிப்பித்த புண்ணியவாளன் கொட்டை எழுத்தில் ‘கவிச்சக்கரவர்த்தி கம்பன் பாடியது’ என்ற தலைப்பையும் தந்துவிட்டார். பேசத்தொடங்கிய புலவர் இப்பாடலை விரிவாகப் பாடி அதற்கு விளக்கமும் கூறினார். எத்தகைய பெரியவரும் முடிதிருத்துபவரின்முன், தலை வணங்கியே தீரவேண்டும் என்ற கருத்துடைய அப்பாடலுக்கு நடிப்புத் திறமையுடன் விளக்கம் கூறிவிட்டு, “இப்படி ஒரு பாட்டைப் பாட யாரால் முடியும்? கவிச்சக்கரவர்த்தி கம்பனால்மட்டுமே முடியும்” என்று கூறிமுடித்தார். தலைமை ஏற்றிருந்த அடிகளார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஆனால், ஒன்றும் கூறவில்லை. அவர் பேசிமுடித்ததும் அக்கால மரபுப்படி அவர் பேச்சுக்கு முடிவுரை ஒன்றும் கூறாமல், என்னைப் பேசுமாறு அழைத்தார்.

கூட்டம் தொடர்ந்தது, இரண்டாம் பேச்சாளனாகிய நான் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்ற பட்டத்திற்குப் பாரதி முழுத்தகுதி வாய்ந்தவன் என்பதை நிறுவும் வகையில் விரிவாகப் பேசினேன். ஒரு கவிச்சக்கரவர்த்தி என்பவன் பழைய சட்ட திட்டங்களைக் கட்டிக்கொண்டு வாழவேண்டும் என்ற தேவையில்லை. சக்கரவர்த்தி ஆதலால் அவர் புதிய சட்டங்களை நிறுவலாம் என்ற அடிப்படையை விவரித்து விட்டுப் பாரதி இதனை எவ்வாறு செய்தான் என்று கூறினேன். அதுவரை, உயிர்கள்தான் தலைவிகள், இறைவன் ஒருவனே தலைவன் என்றிருந்த பழைய மரபை உதறித்தள்ளிவிட்டு ‘கண்ணம்மா என் காதலி’, ‘கண்ணன் என் சேவகன்” என்ற முறையில் புதிய பாடல்களை அமைத்ததை எடுத்துக் கூறினேன். அன்றுவரை நிலவியிருந்த ஆண்டான்