பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அடிமைத்திறத்தை உதறிவிட்டு ‘விநாயகர் அறுபத்தாறு’ பாடியுள்ளான் பாரதி என்றும் கூறினேன்.

நான் பேசி முடித்ததும் அடிகளார், ஷெல்லி முதலிய மேனாட்டுக் கவிஞர்களுடன் பாரதியை ஒப்பிட்டு முடிவுரை கூறத் தொடங்கினார். ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் பாலித்திட வேண்டும் பராசக்தி’ என்பது பாரதியின் வாக்கு இதை எடுத்துக்காட்டிய அடிகளார், “இக்கருத்துப் புதுமையானது; இக்கருத்தைக் கவிஞன் எங்கிருந்து பெற்றான் தெரியுமா? அவன் போற்றிப் படித்த ஷெல்லியின் வானம்பாடி (Skylark) என்ற பாடலில் வரும் ஓரடியின் தமிழாக்கம்தான் இது என்று கூறிவிட்டு, ‘Like a poet hidden in the light of thought, singing hymns unbidden till the world is wrought’ என்ற அடிகளை அடிகளார் எடுத்துக் காட்டினார்.

தமிழ்ப்புலவர்கள் பலரும் பாரதியென்ற பெயரையே அறியாத காலத்தில் இவ்வளவு ஆழமாகப் பாரதியைப் பயின்று ஒன்றேகால் மணிநேரம் முடிவுரை என்ற பெயரில் சொற்பெருக்காற்றினார் என்றால், அது விபுலானந்த அடிகளார் ஒருவரால்மட்டுமே முடியும்.

விழா முடிந்து, தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு ஊர்க்கார நண்பரொருவர் “சுவாமி முதற்பேச்சுக்கு முடிவுரை சொல்லாமலே விட்டுவிட்டீர்களே! ஏன்?” என்று கேட்டார். உடன் பத்துப்பேர் இருந்தனர். அந்த இலங்கைச் சிங்கம் எதுபற்றியும் கவலைப்படாமல் “ஓ, யாம் துறவியாக இருத்தலினன்றோ அந்தக் கயவனை நையப் புடைக்காமல் விட்டுவிட்டோம்” என்று கூறியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.