பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ♦ 55


பங்கு செயற்படும். அவையில் அவர் உறுப்பினரல்லர் ஆதலால் வினாக்களை அவர் தொடுக்க முடியாது. வினாக்களும் விடையும் ஆங்கிலத்தில்தான், மாணவர்களின் நடுவே அமர்ந்துகொண்டிருக்கும் துணைவேந்தர், திடீரென்று பக்கத்தில் இருக்கும் மாணவரைத் தூண்டிவிட்டு, வினாக்களைச் சொல்லிக் கொடுத்து, அவற்றைக் கேட்குமாறு செய்வார்; சிந்தித்து விடை கூறவேண்டிய வினாக்களும் இருக்கும்; வேடிக்கையான வினாக்களும் இருக்கும். ஒருமுறை துணைவேந்தரின் தூண்டுதலின்பேரில் ஒரு மாணவர் எழுந்து “தலைவர் அவர்களே! முன் வரிசையிலுள்ள இரண்டு விசிறிகள் சுழலவில்லை. கடைசிப் பந்தியில் விளக்குகள் எரியவில்லை. இவற்றைக் கவனிப்பது தங்கள் கடமையல்லவா?” என்று கேட்டார். அதற்கு நான் கூறிய விடை வருமாறு. “இந்த வினாவை நீங்கள் கேட்கவில்லை, விவரம் தெரியாத உங்களைத் தூண்டிவிட்டு இந்த வினாவைக் கேட்க வைத்திருக்கிறார் ஒருவர். ஒன்று தெரியுமா உங்களுக்கு இந்த அற்ப வேலைகளைக் கவனிப்பது இந்த மாபெரும் மன்றத் தலைவரின் பணியன்று. இதற்கெனவே பெருந்தொகையைச் சம்பளமாகக் கொடுத்து, துணைவேந்தர் என்ற பெயரையும் கொடுத்து ஒருவரை நியமித்துள்ளார்கள். அவருக்குத் தகவல் அனுப்பி இவற்றைக் கவனிக்குமாறு செய்கிறேன்” என்று நான் விடைகூறியபோது, மண்டபமே அதிரும்படி அனைவரும் கைகொட்டிச் சிரித்தார்கள். இதில் மிக அதிகமாக கைகொட்டி, வெடிச் சிரிப்பும் சிரித்தவர் யார் தெரியுமா? துணைவேந்தராகிய மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் அவர்களே.

ஒரு துணைவேந்தரை இந்தச் சிறுசிறு பணிகளை எல்லாம் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர் என்று வேறு யாரையேனும் கூறியிருந்தால் என் நிலைமை என்னவாக ஆகியிருக்கும்! ஆனால், தம்மையே கேலி செய்யும் அந்த