பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56 ♦ மகாகனம் சீனிவாச சாஸ்திரியார்


விடையைக் கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார் என்றால், அவர் மனிதர்களுள் ஒரு மாமனிதராவார் என்பதை அன்றே சிலர் புரிந்து கொண்டிருந்தோம்.

பல்கலைக்கழகத்தில் ஒரு பெரிய வேலை நிறுத்தம் தொடங்கிற்று. திரு. பாலதண்டாயுதத்திற்கும் எனக்கும் “யூனிவர்சிடி யூனியனில்” ஏற்பட்ட கருத்து மோதல் பெரிதாக வெடித்தது. இரண்டு கூட்டங்களுக்கு வரக்கூடாதென்று அவரை ஒதுக்கிவைத்தேன். அதன் பயனாக மூண்டதுதான் வேலைநிறுத்தம். அது சில நாட்களில் அரசியல்வாதிகளின் கைகளுக்குப் போய்விட்டது. இதை வைத்துக்கொண்டு பல்கலைக் கழக நிர்வாகிகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த சிலர் இதைப் பெரிதாக ஊதி வளர்த்து விட்டார்கள், நாளாவட்டத்தில் இதனைத் தொடங்கிய பாலதண்டாயுதத்திற்கே அதை வழிநடத்தவோ நிறுத்தவோ ஆற்றலில்லாமல் போய்விட்டது.

இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் காலத்தில் பாலதண்டாயுதம் கூட்டம் போட்டுப் பேசுவார். துணைவேந்தரும் அதில் போய்க் கலந்துகொள்வார். துணைவேந்தரை எதிரே வைத்துக்கொண்டு பாலதண்டாயுதம் இவரையே எள்ளி நகையாடுவார். “தோழர்களே! இவருக்கு ‘ரைட் ஆனரபிள்’ என்று ஆங்கில ஆட்சி பட்டம் கொடுத்தது. ஆனால், திரு. சாஸ்திரியார் அவர்கள் ‘இஸ் நெய்தர் ரைட் நார் ஆனாபிள்” (is neither right nor honourable) என்று பாலதண்டாயுதம் பேசியவுடன் மிகப் பெரிதாகக் கைதட்டி, தம்முடைய தொடையையும் தட்டிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தவர் யாரென்று நினைக்கிறீர்கள்? அவர்தான் துணைவேந்தர் மகாகனம் சாஸ்திரியார் அவர்கள், அந்த மாமனிதனின் பரந்த மனப்பான்மைக்கும், எதிலும் பிழை காணாத பண்பிற்கும் இது ஓர் எடுத்துக்காட்டு.