பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 ♦ நான் கண்ட பெரியவர்கள்


கண்டு, நாங்கள் நடுங்கிவிட்டோம். ஒன்றுமே பேசாமல் அப்படியே சில நிமிடங்கள் இருந்துவிட்டார். வாயாடியாகிய நான் மிக்க மரியாதையுடன் எழுந்து ‘ஐயா! நாங்கள் தங்கள் மனம் நோகும்படி ஏதேனும் தவறு செய்திருந்தால் தயைகூர்ந்து மன்னித்துக்கொள்ளுங்கள். என்ன பிழை செய்தோம் என்பதை எடுத்துக்காட்டினால் உறுதியாகத் திருத்திக்கொள்வோம்’ என்றேன். சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு “அடே கம்மனாட்டி” என்று என் செல்லப்பெயரைச் சொல்லி அழைத்தார். அவரிடம் சென்றபோது தாம் எழுதிய கடிதமொன்றை என் கையிற் கொடுத்து எல்லோருக்கும் படித்துக்காட்டுமாறு உத்தரவிட்டார். “எனது அன்புக்கினிய மகாத்மாவுக்கு” என்று தொடங்கும் முறையில் ஆங்கிலத்தில் அக்கடிதம் எழுதப் பெற்றிருந்தது. அதைப் படித்துக் காட்டினேன், அதன் சாராம்சம் வருமாறு,

‘அன்புக்கினிய மகாத்மாவுக்கு, தாங்கள் இப்பொழுது அனுப்பியுள்ள ‘ஹரிஜன்’ இதழைப் படிக்கின்றவரையில் இந்தியாவிலேயே சிறந்த ஆங்கில அறிஞன், சிறந்த பேச்சாளன், சிறந்த எழுத்தாளன் நானே என்ற எண்ணம் என்னை மூடி மறைத்துக்கொண்டிருந்தது. ஒருவர் எழுதும் எழுத்தின் சிறப்பு அதனைக் கேட்பவர், அல்லது படிப்பவர் மனத்தின் ஆழத்தில் எவ்வளவு தூரம் சென்று பாய்கிறது என்பதைப் பொறுத்ததேயாகும். எண்ணங்களை வெளியிடும் கருவியாகிய மொழி, கேட்பவர் அல்லது படிப்பவர் மனத்தின் ஆழத்தில் சென்று தைக்கவில்லையானால் எவ்வளவு சிறப்பாக, அழகாக அந்த வாக்கியக் கோவைகள் அமைந்திருப்பினும் ஒரு பயனும் இல்லை என்பதை இப்போது உணர்ந்துகொண்டேன். இந்தத்