பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ♦ 65


கூர்கிறேன். இதனை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு ஒரு காரணமுண்டு. உலகம் முழுவதும் நன்கறிந்த மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் மாணவர்களோடு சேர்ந்து கொட்டமடிப்பதும், மகாத்மா காந்திக்குக் கடிதம் எழுதியதும், என்போன்ற ஏழைச் சிறுவன் ஒருவனுக்குப் பரீட்சைக்குப் பணம் கட்ட உதவியதும், பின்னர் என் திருமணம் நடைபெற உதவியதும் இன்றுவரை உலகம் அறிந்திராத அப்பெருமகனின் செயல்களாகும்.

இவ்வளவு எளிமையுடன் அனைவரிடம் பழகினார் என்றால், அதனால் அவரைத் தரம்குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. மாமனிதர்கள் குழந்தைபோல் பல நேரம் எளிதாக இருப்பார்கள். ஆனால், தேவை ஏற்படும் பொழுது அவர்களுடைய உண்மையான சொரூபத்தை அறிய முடியும். மாவட்டக் காவல்துறை கானிங்ஹாமுக்கு நிகழ்ந்தவற்றை இப்பகுதியில் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். காவல்துறை அதிகாரியாகிய வெள்ளையனுக்கு எதிரே, தம் விஸ்வரூபத்தைக் காட்டியதோடு மகாகனம் அவர்கள் நின்றுவிடவில்லை.

1936 ஆம் ஆண்டுக்குரிய பட்டமளிப்பு விழா மிகக் கோலாகலமாகவும் விமரிசையாகவும் தொடங்கிற்று. அன்றைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஸர் ஆர்ச்சிபால்ட் நை பட்டமளிப்பு விழாவுக்கு வருவதாக இருந்தது. மாணவர்களாகிய நாங்கள் மாடியின்மேல் ஏறிக்கொண்டு கவர்னர் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். புரவலர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் சாலையில் நின்றுகொண்டு கவர்னர் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். நியாயமாகத் துணைவேந்தரும் அவருடன் நின்றுகொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், துணைவேந்தரோ, சாலையின் வடகோடியில் நின்றுகொண்டு அங்கு வரும் வண்டிகளை ‘இங்கே நிறுத்து; அங்கே நிறுத்தாதே’ என்று போக்குவரத்துக் காவல் துறைப்