பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பணியைச் செய்து கொண்டிருந்தார். ராஜா ஸர் அவர்கள் கூப்பிடவும் முடியாமல், ‘கவர்னர் வருகின்ற நேரத்தில் எங்கோ போய் நிற்கிறாரே’ என்ற ஆதங்கத்துடன் சாலையைத் திரும்பிப் பார்ப்பதும் துணைவேந்தரைப் பார்ப்பதுமாகத் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாகக் கவர்னர் வண்டி வந்து நின்றது. புரவலர் ராஜாஸர் வண்டிக் கதவைத் திறக்க, கவர்னர் கீழே இறங்கினார். மிக பயபக்தியுடன் புரவலர் சற்று எட்டி நின்று கொண்டிருந்தார். ஆனால், துணைவேந்தர் வந்தபாடில்லை. கவர்னர் சாலையில் நின்றுகொண்டிருந்தார். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து, துணைவேந்தர் மிகச் சாவதானமாக நடந்துவந்தார். கவர்னர் மிக்க பணிவுடன் வளைந்து கொடுத்து, துணைவேந்தரை வணங்கினார். துணைவேந்தர், வளைந்து வணங்கிய கவர்னரின் முதுகில் படார் என்று ஒர் அடி கொடுத்து “இளைஞனே, எவ்வாறு இருக்கிறாய்?” என்று வினவினார். புரவலர் முதல் யாவரும் Your Excellency என்று நிமி டத்திற்கு மூன்று முறை போட்டுப் பேசும் அதே கவர்னரை முதுகில் தட்டி ‘Young fellow’ என்று துணைவேந்தர் அழைப்பது, மாணவர்களாகிய எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. கவர்னர், துணைவேந்தர், படி ஏறி மாடி வர, புரவலர் பின்னே வந்தார். மேடையில் மூன்றே நாற்காலிகள். ஒரு புறம் புரவலர், மறுபுறம் துணைவேந்தர், நடுவிலே கவர்னர். துணைவேந்தர் சுருக்கமாக வரவேற்புரை கூறினார். கவர்னர் பேச எழுந்தார். ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. திடீரென்று ஆறடி உயரமிருந்த ஸர் ஆர்ச்சிபால்ட் நை வளைந்து, துணைவேந்தரின் பாதங்களை, ஒரு பழக்கப்பட்ட இந்தியனைப்போல் தொட்டு வணங்கினார். துணைவேந்தர் வடமொழியில் பெரியோர்கள் சொல்லும் ஆசீர்வாதத்தை அப்படியே சொன்னார். என்ன வியப்பு! அந்த ஸ்லோகம்