பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vii

எனக்கு நேர்ந்த நேரடியான அனுபவங்களிற் சிலவற்றைத் தொகுத்துக்கொடுப்பதே இந்நூலின் நோக்கமாகும்.

இந்நூலிற் கூறப்பெற்ற பெரியவர்கள் அனைவரும் பல்வேறு பரிமாணம் உடையவர்கள்; சமுதாயத்திற்குப் பல்வேறு நலங்களைச் செய்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாக நூல் எழுதினால் இவர்களுடைய பண்புகள் செயல்கள் ஆகியவைபற்றி விரிவாக எழுத வாய்ப்புண்டு. ஆனால் இந்தச் சிறு நூல், அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. மேலும் அவர்கள் செய்த செயல்களைப் பக்கம்பக்கமாக விரித்துரைப்பதைக் காட்டிலும் தனிமனிதன் ஒருவனுக்கு அவர்கள் செய்த உபகாரத்தைக் குறிப்பிடும்பொழுது இந்த ஒரு செயலின் மூலம் அவர்களை முழுவதுமாகக் காணமுடிகிறது. புல்லின் நுனியிலுள்ள பனித்துளி எதிரேயுள்ள ஆலமரம் முழுவதையும் தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலத் தனிமனிதனுக்கு இவர்கள் செய்த இந்தச் சிறு உபகாரங்கள் அவர்கள் பெருமையை வெளிக்காட்டும் பனித்துளியாய் அமைவதைக் காணமுடிகிறது. அதற்காகவே இந்த நூல் எழுதப்படுகிறது.

ஒரு சிலரைப்பற்றிச் சில பத்திகளே எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு சிலரைப்பற்றி அதிகப் பக்கங்கள் எழுதப்பட்டிருக்கும். இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு இவர்களுக்குள் தார தம்மியம் பார்ப்பது, பெரியபுராணத்தில் காணப்பெறும் அடியார்களிடையே பாட்டின் தொகையைக் கொண்டு தாரதம்மியம் பார்ப்பதுபோலப் பெரும் பிழையாக முடிந்துவிடும். இரண்டு வரிகளில் எழுதப்பெற்றாலும், இருபது பக்கங்களில் எழுதப்பெற்றாலும் இவர்கள் அனைவரும் மாமனிதர்களே என்பதை ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.