பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழவேள் பி.டி.இராஜன் ♦ 69


இருந்து வந்தார். இது தக்க தருணம் என்று கருதிய வெலிங்டன் திரு.வி.க. அவர்களை நாடு கடத்தும் ஆணை பிறப்பித்தார்.

கவர்னர் மாளிகையிலிருந்து விடப்பட்ட அந்த ஆணை முதல்வர் பனகல் அரசர் மேசைக்கு வந்தது. கட்சியளவில் எதிர்க்கட்சியாகிய காங்கிரஸில் திரு.வி.க. இருந்தார் என்றாலும் நீதிக்கட்சியினர் திருவிகவை மிக அதிகமாகப் போற்றிப் பாராட்டி வந்தனர்.

இந்த ஆணையைக் கண்ட பனகல் அரசர், தியாகராஜச் செட்டியார் முதிலியவர்கள் திடுக்கிட்டனர். திரு.செட்டியார் அவர்கள் உடனே கவர்னரை கோட்டையில் சென்று சந்தித்தார். இந்த ஆணை நிறைவேற்றப்பட்டால் அடுத்த விநாடியே பனகல் அரசரின் மந்திரிசபை இராஜினாமாச் செய்துவிடும். அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராகவிருந்தால் கவர்னர் இந்த ஆணையை நிறைவேற்றலாம் என்றும் சொல்லிவிட்டார் செட்டியார், வெலிங்டன் ஆடிப்போனார். அன்றைய நிலையில், நீதிக்கட்சியின் ஆட்சியை இழக்க வெலிங்டன் தயாராக இல்லை. வேறு வழியின்றி திரு.வி.க.வை நாடு கடத்தும் ஆணையை வாபஸ்பெற்றுக் கொண்டார்.

இதுபோன்ற அருஞ்செயல்கள் பலவற்றை ஆர்ப்பாட்டமின்றிச் செய்த நீதிக்கட்சியில் பெரும் பொறுப்பை வகித்து வந்தார் பி.டி.இராஜன். இதிலொரு வேடிக்கை என்னவென்றால் ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் தொடர்பு நீதிக்கட்சிக்கு இருந்துவந்தது என்றாலும் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த தியாகராஜச் செட்டியார் முதல் பி. டி. ஆர்.என்று அழைக்கப்பட்ட பொன்னம்பலத் தியாகராஜன் வரை, அனைவரும் பக்திமான்களாகத் திருக்கோயில் வழிபாடு செய்பவர்களாக இருந்துவந்ததேயாகும்.