பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழவேள் பி.டி.இராஜன் ♦ 71


கேள்விப்பட்டதில்லையா? பி.டி.ஆர். விஷயத்தில் அது இன்றும் நடைபெற்று வருகிறது என்றார்.

மதுரையை அடுத்துள்ள உத்தமபாளையம் என்ற ஊரில் பெருஞ்செல்வர் குடியில் தோன்றியவர் பி.டி.ஆர். பல காலம் மேல் நாட்டிலிருந்து மீண்டாலும் மக்களுக்குச் சோறிடும் பழக்கமும் இறைபக்தியும் இறுதிவரை அவரை விட்டு நீங்கவேயில்லை.

1928இல் சென்னை மாகாண ‘லெஜிஸ்லேட்டிவ் கவுன்சி’லுக்குத் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சியின் சார்பில் பி.டி.ஆர். நின்றார். அவரை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் மட்டப்பாறை வேங்கடராமையர் நின்றார். ஐயரும், பி.டி.ஆரும் இணைபிரியாத் தோழர்களாயினும் கட்சியால் வேறுபட்டவர்கள்.

தேர்தல் சமயத்தில் மட்டப்பாறையாருக்குத் தேர்தல் பிரசாரம் செய்துவந்த இளைஞர் கூட்டம் முழுவதும், மதிய உணவிற்குப் பி.டி.ஆர் வீட்டுக்குத்தான் வருவார்கள். நடைபெற்ற தேர்தலில் பி.டி.ஆர் வெற்றிபெற்றுவிட்டார், அது பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் ‘சோறுபோட்டே பி.டி.ஆர் என்னைத் தோற்கடித்து விட்டார்’ என்று வட்டப்பாறையார் சொல்வாராம். கம்பநாடனுக்குத் துணைபுரிந்த சடையப்ப வள்ளலைப்பற்றி ‘அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையான்’ என்று கூறுவார்கள். அந்த சடையப்ப வள்ளலின் பரம்பரையில் வந்த பி.டி.ஆரும் இந்தப் பாடலுக்கு இலக்கியமாகவே வாழ்ந்தார்.

அமைச்சராக இருந்தபொழுதும் எவ்விதப் பதவியும் இல்லாமல் இருந்தபோதும் பி.டி.ஆரின் மதுரை இல்லம் அன்ன சத்திரமாகவே விளங்கிற்று. பி.டி.ஆர். மதுரையில் இருந்தால், அன்னை மீனாட்சியின் திருக்கோயிலுக்குச் செல்லாமல் இருந்ததேயில்லை. மதுரையில் அன்னையின்