பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழவேள் பி.டி.இராஜன் ♦ 75



முதல் மகனார் இப்படியென்றால் கடைசி மகனார் எப்படி இருப்பாரென்று சொல்லவேண்டுமா? தந்தையார் அரசியல், ஆன்மிகம் என்ற இரண்டு வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்து நடத்தினார். கடைசி மகனார்; அதற்கு அப்படியே வாரிசாக அமைந்துள்ளார். தலைவர் உட்பட நூற்றுக்கணக்கானவர் எழுந்து ‘நாங்கள் அனைவரும் நாத்திகர்கள்; நாத்திகர்களாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்’ என்று பேசும் சட்டசபைக் கூட்டத்தாரிடையே ஒருவர் எழுந்து நிற்கிறார். அவரது நெற்றி நிறைய திருநீறு. அதனிடையே மிகப்பெரிய குங்குமப் பொட்டு. இது அவருடைய புற அடையாளம். ‘நான் அன்னை மீனாட்சியின் அருளால் பிறந்தேன். அவளுடைய அருளால்தான் இன்றுவரை வாழ்கிறேன். இந்தச் சட்டமன்றச் சபாநாயகர் பதவியும் அவள் எனக்கு அளித்ததே என்று உறுதியாகக் கூற விரும்புகிறேன்’ என்று ஒருவர் நாத்திகர்கள் இடையே நின்று கூறுகிறார் என்றால் அவர் பி.டி.ஆரின் புதல்வராகத்தானே இருக்கமுடியும்! உண்மைதான், இன்றைய சபாநாயகர் பி.டி.ஆர் பழநிவேல்ராஜன் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என்பதை நிரூபித்து வருகிறார். திரு.பழநிவேல்ராஜன் மதுரையில் இருந்தால் அன்னையின் திருக்கோயிலுக்குச் சென்று அன்றாடம் வழிபடுவதை மறந்ததே இல்லை.

பி.டி.ஆரின் ஆண்கள் வாரிசு இப்படியென்றால் பெண் வாரிசு சொட்டையாகிவிடுமா என்ன? அன்னை மீனாட்சியின் அருளைப் பூரணமாகப் பெற்ற பி.டி.ஆரின். ஒரு மகளார், எல்அண்டுடி (L&T) என்ற பெரு நிறுவனத்தின் தலைவராக இருந்து ஒய்வுபெற்ற C.R. இராமகிருஷ்ணனின் மனைவியாவார். மற்றொரு மகளார் உச்ச நீதிமன்ற நீதிபதிப் பதவியிலிருந்து ஓய்வுபெற்று சேக்கிழார் ஆராய்ச்சி மையம் போன்ற பல அமைப்புகளுக்குத் தலைவராக இருந்து தொண்டாற்றிவரும் திரு.எஸ்.நடராஜனின் மனைவியாவார்.