பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சா.கணேசன் ♦ 77


மேற்கொண்டனர். ஒருவர் மணலி குடும்பத்தைச் சார்ந்த ம. பாலசுப்பிரமணிய முதலியாராவார். மற்றொருவர் கடலூர் தி. கே. நாராயணசாமி நாயுடு ஆவார். இந்த இருவரும் இலரேல் சைவத் திருமுறைகள் இன்று உலாவுவதுபோல் வந்திருக்க முடியுமா என்பது ஐயத்திற்குரியது. சைவத் திருமுறைகளுக்குரிய புத்துயிர் கொடுத்து வெளியிட்டதுபோல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தையும் திருப்பாவை வியாக்யானத்தையும் வெளியிட்ட பெருமை ம.பா. அவர்களையே சேரும். சைவ உலகம் இன்று அவர்களை மறந்துவிட்டாலும் இந்த மாமனிதர்களின் தொண்டு, வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாம்.


13. சா. கணேசன்


1940-இல் அமரர் சா. கணேசன் அவர்கள் கம்பன் கழகத்தைக் காரைக்குடியில் தோற்றுவிக்க நினைத்தார். என் தந்தையாரிடமும் என்னிடமும் நிறைந்த அன்புகொண்ட அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டிப் பழகினார். பிற்காலத்தில் சென்னையில் என்னுடனேயே தங்கியிருந்தவர் அவர் ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவிற்கு நாங்கள் இருவரும் பழகிவிட்டோம். 1940ல் கம்பன் கழகம் நிறுவவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றவுடன், காரைக்குடியில் அவருடைய வீட்டில் சிலர் கூடினார்கள். டி.கே.சி, சீனிவாசராகவன், ஏ.சி.பால் நாடார், சா.கணேசன் என்பவர்களுடன் நானும் இருந்தேன். அவ்வாண்டு, சிறிய அளவில் கம்பன் விழாவைக் கொண்டாடினர். கம்பன் சமாதியடைந்ததாகக் கருதப்படும் நாட்டரசன்கோட்டைக்குச் சென்று, சமாதிக்குப் பூசனை வழிபாடு செய்யும் வழக்கம் பின்னர்த்தான் வந்தது. மீனாட்சி பெண்கள் பள்ளியின் பின்புறத்தில் சிறியதாக ஒரு பந்தல் அமைத்து, விழாக் கொண்டாடப்பட்டது.