பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏ.என்.சிவராமன் ♦ 81


விரும்பவில்லை. எனவே, முழு விவரத்தையும் அவரிடம் சொல்லி, “நீங்கள் தனியே வாருங்கள்” என்றேன். “இல்லைடா உன் மடிமேல் ஏறிக்கொண்டாவது, அதில்தான் வருவேன்” என்றார். புறப்படும் நாள் வந்தது. என்னுடைய ஓட்டுநர் குப்புசாமியை அழைத்து வண்டியை எடுத்துக் சென்று சிவராமனை அழைத்துவருமாறு வழி சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த என் மனைவி ‘டேய் குப்புசுவாமி, அவரைப் பார்த்தால் மிக்க அப்பாவி மாதிரி இருப்பார். ஜாக்கிரதை, மிக்க மரியாதையுடன் அழைத்து வா’ என்று கூறினாள். இந்த நேரத்தில் என் மனைவி சொன்னது தேவையில்லாதது என்று நான் கருதினேன். ஆனால், பின்னர் நடந்ததை நினைந்து பார்க்கும்பொழுது அவள் சொன்னது எவ்வளவு சரியென்று பட்டது.

ஓட்டுநர் ஏ.என்.எஸ் வீட்டிற்குச் சென்றார். பட்டா சாலையில் குப்புறப் படுத்துக்கொண்டு, ஒரு கைக்கு அணையாக ஒரு தலையணையை வைத்துக்கொண்டு வலக்கையால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். அவர் அந்த வீட்டுச் சமையல்காரன் என்று நினைத்து விட்டான் குப்புசாமி. ‘ஓ ஐயரே’ என்று விளித்து, ‘இன்ன வீட்டிலிருந்து வந்திருக்கிறேன். இந்த வீட்டு ஐயாவை அழைத்துப்போவதற்காக’ என்று கூறிவிட்டு, காருக்குத் திரும்பிவிட்டான். ஏ.என்.எஸ் அவர்கள் ஒரு ஜமக்காளத்தில் ஒரு தலையணைச் சுற்றிக் கையில் எடுத்துக் கொண்டு வந்து, டிக்கியைத் திறக்குமாறு கேட்டார். ஓட்டுநர் ‘ஓ ஐயரே, அங்கே படுப்பதற்கு எல்லாம் தருவார்கள். ஐந்து பேர் போக வேண்டும். இந்தப் படுக்கைக்கெல்லாம் இடமில்லை’ என்று முரட்டுத் தனமாகக் கூறிவிட்டான். ‘நீ சொல்வது சரிதான்’ என்று கூறிய ஏ.என்.எஸ் படுக்கையை உள் கொண்டு சென்று போட்டுவிட்டார். இனிமேல்தான் வீட்டுக்காரர் பெரியவர் வரப்போகிறார் என்ற நினைப்புடன்,