பக்கம்:நாயகர் பெருமான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

போதெல்லாம் நீர் உட்புகுந்து கட்டிடத்தின் பிற பாகங்களையும் சேதப் படுத்தி வந்தது. மக்கா நகர் மக்கள், அக்கட்டிடத்தைப் புதுப்பிப்பதற்காகக் கூடிப் பேசினார்கள். கட்டிடத்தின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு கூட்டத்தார் கட்டிக் கொடுப்பதென்று ஏற்பாடாயிற்று. இந்த ஏற்பாட்டின் பேரில் கட்டிட வேலை பல பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு நடந்து முடிந்தது.

முக்கியமான பிரகாரத்தில் இருந்த ஹஜர் அஸ்வத் என்னும் புனிதச் சின்னம் கட்டிட வேலைக்காகப் பெயர்த்தெடுக்கப் பட்டிருந்தது, அதை மீண்டும் நிலை நாட்ட வேண்டிய வேலை மீந்திருந்தது. விண்ணுலகச் சின்னமாகிய அதை நிலைநாட்டும் பேறு தமக்குக் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தார்கள். இதனால் பெரும் கலகமே ஏற் பட இருந்தது.

கலகம் ஏற்படாமல் தடுக்க ஒரு பெரியவர் முன் வந்தார். அவர், அப் புனிதச் சின்னத்தை அமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்ப தென்பதற்கு ஓர் ஆலோசனை கூறினார்.

புனிதத் திருத்தலமாகிய கஅபாவின் வாயில் வழியாக மறு நாள் காலையில் முதன் முதல் யார் வருவாரோ, அவர் கூறும் முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பெரியவர் கூறினார். எல்லோரும் பெரியவர் கருத்தை ஒப்புக்கொண்டனர்.