பக்கம்:நாயகர் பெருமான்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

கலங்கா உறுதியுடன் வெளிப்பட்ட இச் சொற்கள் உமரின் மனத்தைக் கரையச் செய்து விட்டன. உமர் உடன் பிறந்தாளை நோக்கிப் பரிவுடன், “நீங்கள் ஓதிய வாசகங்களை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்.

ஒளித்து வைத்த தாள்களை எடுத்து வந்து காட்டினார் அம்மையார்.

அவற்றை எடுத்துப் படித்துப் பார்த்த உமர் அச் சொற்றொடர்களில் படிந்துள்ள உண்மைகளுக்கு ஆட்பட்டார். புது மனிதரானார். புத்துணர்ச்சியுடன் நபி பெருமான் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார்.

நபிபெருமான் அவர்கள் அப்போது அர்க்கம் என்ற நண்பரின் வீட்டில் நம்பிக்கை யுள்ளவர்களுடன் இருந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்.

அபூஜாஹில்லிடம் உமர் உறுதியுடன் புறப்பட்ட செய்தி அங்கிருந்த முஸ்லிம்களுக்குத் தெரிந்திருந்தது. எனவே, உமர் வந்து கதவைத் தட்டியபோது, அதைத் திறக்க யாரும் முன்வர வில்லை. அச்சத்தால் பேசாதிருந்த அவர்களை நோக்கி ஹஸரத் ஹம்ஸா அவர்கள் “அஞ்ச வேண்டாம். அவரை நான் கவனித்துக் கொள்கிறேன். ஏதேனும் தீமை நிகழுமாயின் அவர் கை வாளாலேயே அவர் தலையைக் கொய்து விடுகிறேன். சென்று கதவைத் திறந்து விடுங்கள்” என்று கூறினார்.