பக்கம்:நாயகர் பெருமான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பெருமான் அவர்களின் கருணையை அறிந்த அந்தப் பெண் மீண்டும் அவர்களை நோக்கி, “என் உறவினர் அனைவரும் சிறையில் இருப்பதால், என்னையும் சிறையிலேயே வைத்திருக்க வேண்டுகிறேன். அவர்களை வெட்டிக் கொல்வதாக இருந்தால் முதலில் என் தலையை வெட்டுமாறு கட்டளையிட வேண்டுகிறேன். ஏனெனில், என் உறவினர் இறந்து போனபின் நான் மட்டும் வாழ்ந்திருக்க விரும்பவில்லை” என்று கூறினாள்.

இதைக் கேட்ட பெருமான் அவர்கள் பெருங் கருணைகொண்டு, பிடிபட்ட தைக்கூட்டத்தார் அனைவரையுமே விடுதலை செய்ய ஆணையிட்டார்கள். திரும்பி வந்த தன் சகோதரியின் வாயிலாகப் பெருமானவர்களின் உயர் குணங்களைக் கேட்டறிந்த அதி, அவளுடன் மதீனாவிற்கு வந்து பெருமானைக் கண்டு அவர்கள் வாழ்த்தைப் பெற்று இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டான்.

26. கவிஞன் பெற்ற பரிசு அரபி

நாட்டிலே ஒரு பெருங்கவிஞர் இருந்தார். அவர் பெயர் கஅப் இப்னுஸுஹைர். இஸ்லாத்தைக் கண்டித்தும், பெருமான் அவர்களைப் பழித்தும் கவி பாடுவதே தொழிலாகக் கொண்டிருந்தார் அக்கவிஞர். முஸ்லிம்களின் பகைவரான அக்கவிஞரைக் கண்ட இடத்தில் வெட்டித் தள்ளும்படி பெருமானவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.