பக்கம்:நாயகர் பெருமான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. நபிநாயகம் பிறந்தார்

அரபி நன்னாட்டில் மக்காப் பெரு நகரில் பெருமையும் புகழும் மிக்க வீர குறைஷியர் குலத்தில் அப்துல்லா என்னும் பெரியாருக்கும் ஆமினா என்னும் பெருமாட்டிக்கும் அருமை மகனாகப் பிறந்தார், உலகில் ஒரு தனி நெறியைக் காட்டி, ஒருதெய்வக் கொள்கையை நிலைநாட்டி, நல்லற வழியையும், சகோதர உணர்ச்சியையும் வேர் கொள்ளச் செய்ய வந்த திருநபிகளின் இறுதியானவரும் முழுமை பெற்ற வருமாகிய முகம்மது நபி அவர்கள்.

கதிரவனின் வெம்மையால் துயருறும் காலத்து, உயிர் இனங்களுக்கு அவ் வெம்மை நீக்கி இன்பந்தர உறு துணையாய்ப் படர்ந்திருக்கும் மர நிழலைப் போலவும், இழிவு மனப்பான்மையும் கொலைத் தன்மையும் சேர்த்து உண்டாக்கும் பாவமெனும் கொடிய நோயினால் துயருறும் உலகிற்கு அந் நோய் தவிர்த்திடும் மருந்தைப் போலவும், தீன் என்ற நன் மார்க்கமாகிய பயிருக்குச் செழிப்பூட்டப் பெய்த மழையைப் போலவும், குறைஷிக் குலத்துக்கே ஒரு திலகம் போலவும், பெருவையத்தின் அறியாமை இருளை நீக்க வந்த ஒரு மணி விளக்குப் போலவும் முகமது நபி அவர்கள் பிறந்தார்கள்.