பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


விட்டானே; அவனைப் பற்றி ஏன் பழித்துப் பேசுகிறாய்; அவன் செவிகள் மறுத்துவிட்டன; எந்தக் கவிகளும் கேட்க அவனுக்கு இயலாது. இப்பொழுது அவன் வெறும் தோற்பை, அதனுள் இருந்த கூத்தன் ஆடி வெளியேறிவிட்டான்; நாடி அடங்கிவிட்டது; நாளும் முடிந்துவிட்டது.

“செத்தவன் என்ன ஆனான்? வாழ்வு என்பது இவ்வளவுதானா? இல்லை; அடுத்த பிறவி அவனுக்காகக் காத்துக் கிடக்கிறது! நல்லது செய்தால் உயர் பிறவி, அல்லது செய்தால் இழி பிறவி, ஆத்மாவுக்கு அழிவே இல்லை; இந்த உடம்புதான் அழிகிறது; உயிர் அழிவது இல்லை; இப்படித் தத்துவம் பேசித் தருக்கம் செய்கின்றனர்.

சுருக்கமாய்ச் சொல்வதாயின் வாழ்க்கை மழைநீர் மொக்குள், ‘இதுதான்; மழைநீரில் ஒருமுகிழ்ப்புத் தோன்றுகிறது, வெடிக்கிறது; காற்று வெளியேறுகிறது. நீரோடு நீராய் அந்தக் குமிழி மறைந்துவிடுகிறது. வாழ்வு நீரோட்டம் போன்றது; குமிழிகள் தோன்றி வெடிக்கும். தனி மனிதன் ஒரு நீர்க்குமிழி; அவன் சரித்திரமும் அதனோடு முடிகிறது. குமிழி தோற்றம், வடிவம், மாறிவிடுகிறது; நீர் நிலைத்து நிற்கிறது.

ஒருவன் போனால் இந்த உலகம் குடிமுழுகிப் போவது இல்லை. நேற்று அவன் தன் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றான்; இன்று அடுத்த ஆள் அங்கு வந்து புதுக்குடித்தனம் நடத்துகிறான். தடி ஊன்றி நடந்த முதியவர் அடியெடுத்து வைத்து நடந்தவுடன் அங்கே ஒரு புதிய ஆத்திச்சூடி ஆரம்பமாகிறது; “தாத்தா! நீ