பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - நாலடியார்-தெளிவுரை

தகுந்த அளவு செய்யப்படும். அந்தப் பெரியோர்களைப் போல, சிறியவர்கள் தம் செல்வம் பெருகிவருகின்ற காலத்தினும்கூடப் பிறருக்கு உதவுதல் அரிதாகும். -

இதனால் கொடைக் கடனை என்றும் மறவாது போற்றும் பெரியவர்களின் பெருமை கூறப்பட்டது. -

185. உறுபுனல் தந்து, உலகு ஊட்டி, அறுமிடத்தும் கல்லூற் றுழியூறும் ஆறேபோற், செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும், சிலர்க்காற்றிச் செய்வர், செயற்பா லவை.

மழை வளமானது செழிப்புற்றிருந்த காலத்திலே மிகுதியான நீரைக் கொண்டு தந்து உலகத்தாரை எல்லாம் உண்ணச்செய்து, அந்த நீர்வளமானது அற்றகாலத்தும் தோண்டும் ஊற்றுக்களிலே ஊறிச் சுரந்து உலகு ஊட்டும் ஆற்றினைப் போலப் பெரியவர்கள், தம்முடைய செல்வங்களை எல்லாம் பலருக்கும் கொடுத்து உதவியதனால் தாம் செல்வமிழந்து வாடிய காலத்தினும், தம் சக்திக்கு ஏற்றபடி சிலருக்காயினும் கொடுத்துச் செய்யும்படியான உதவுதற் செயலிலே ஈடுபடுவார்கள்.

கொடைக் குணம் உடைய பெரியோரின் பெருமை கூறப்பட்டது.

186. பெருவரை நாட! பெரியார்கண் தீமை

கருநரைமேற் சூடேபோல் தோன்றும்;-கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும், சிறியார்மேல் ஒன்றானும் தோன்றா கெடும்.

பெரிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவனே! பெரியவர்களிடத்தே தோன்றிய தீமையானது, பெரிய வெள்ளை எருதின் மேலே இட்ட சூட்டின் வடுப்போல என்றும் மாறாமல் நன்கு வெளிப்படத் தோன்றும். அந்தப் பெரிய வெள்ளை எருதைக் கொன்றதைப் போன்ற தீய செயல்களைச் செய்தார் களானாலும், கீழ் மக்களிடத்தே தோன்றும் ஒரு குற்றமானாலும் வெளிப்படத் தோன்றாமல் அழிந்து போய்விடும்.

‘பெரியோர் சிறுவடுவும் தம்மேற்படாதவாறு ஒழுக்க நெறியிலே நிலைத்திருக்க வேண்டும்’ என்று கூறுவதன் மூலம், அத்தகையோரின் பெருமை கூறப்பட்டது.