பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலடியார் தெளிவுரை

கடவுள் வணக்கம்

அருமையான மனிதப் பிறவியினை எடுத்திருக்கிறோம். அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அயர்வாலோ, அறியாமையினாலோ தவறிவிடுவோமானால், ஒரு நல்ல வாய்ப்பினை இழந்துவிட்டவர்கள் ஆவோம்.

உடல் வேறு ஆன்மாவாகிய உயிர் வேறு. தனித்திருந்த ஆன்மா, உடற்கூட்டிலே வாழ்வு பெற்று, பல்வேறு உயிரினங்களாகத் தோன்றித் தோன்றி, அந்தக் கூடுகளை விட்டுப் பிரிந்து உழன்று கொண்டே இருக்கிறது. இப்படிப் பிறப்பும் இறப்பும் என்று உழன்று கொண்டே இருக்கின்ற உயிருக்கு நல்லது தீயது அறியும் அறிவோடு கூடியதான மனிதப் பிறப்புத்தான் சிறப்பானது. இந்தப் பிறப்பிலேதான், அது தன்னுடைய நிலையான நல்வாழ்வுக்கான முயற்சிகளிலே உறுதியுடன் ஈடுபடவேண்டும்; ஈடுபடவும் இயலும்,

உயிர்கள் இப்படிப் பிறந்து இறந்து உழல்கின்ற காலத்து, அவை தம் உயிருக்கு உறுதிபயக்கும் நிலையான பேரின்பத்தை அடைய, அருள்செய்யும் பெருங்கருணையும் தலைமையும் உடையவனாக விளங்குபவன்’ பேரறிவுப் பொருளாகிய ஒருவனே! அவன் ‘உள்ளான் என்பதை உணரவும், அவனுடைய அருளைப் பெறுவதற்கான நன்னெறியின்கண் அயராது ஈடுபடவும் கூடிய ஆற்றலுடையதும், இந்த மனிதப் பிறவிதான்.

இந்த அடிப்படையிலேதான், நம் முன்னோர்கள் பலப்பல கடவுட் கொள்கைகளைக் கண்டனர். அவற்றுள் அருகதேவனே பரம்பொருள் என்ற கொள்கையினை உடையது சமணம்.அந்தச் சமண சமயத்துச் சான்றோர்கள் செய்தது இந்த நூல. -

இந்த நூலினைப் பால் முறை, அதிகார முறை, இயல்முறை எனவெல்லாம் வகுத்து முறைப்படுத்தி, நூலின் பொருளினை விளக்குவதாக அமைந்த உரையொன்றும் வகுத்தவர் பதுமனார் என்பர். அவர் செய்ததே இந்தக் கடவுள் வாழ்த்தும். அவரும் சமண சமயத்தவரே. அதனால், இதனை வழிபடு கடவுளை வாழ்த்தியது எனலாம்.