பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - நாலடியார்-தெளிவுரை

ஒற்கம்-நற்பண்புகளினின்றும் பிறழ்தல், நெறியோக நெறி. தீர-முற்ற முழுக்க. ‘புறத்தே கலந்தவர்போலக் காட்டலாற் பயனில்லை; உறுதியான உள்ளத்துடன் நட்புச் செய்வதே சிறப்பு: சிற்றினத்தார். நட்பு அத்தன்மையுடையது அன்று; அதனால் அதைக் கைவிட்டுப் பெரியோரின் தொடர்புகளையே அனைவரும் நாடவேண்டும் என்பது கருத்து.

205. இன்னர்; இனையர்; எமர் பிறர் என்னுஞ்சொல் என்னும் இலராம் இயல்பினால் - துன்னித் தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரே, யார் மாட்டும் தலைமக்கள் ஆகற்பா லார்.

‘இவர் நமக்கு இன்ன வகையான தொடர்பு உடையவர்; இவர் இப்படிப்பட்ட தன்மை உடையவர்; இவர் நமக்கு வேண்டியவர்; இவர் நமக்கு வேண்டாதவர்’ என்றெல்லாம் வேறுபடுத்திப் பேசும் பேச்சுக்கள் யாதொன்றும் இல்லாதவர் களாக விளங்கும் தன்மையினாலே, துன்பத்தால் வருந்தியவராக வந்த சுற்றத்தார் அனைவருடனும் ஒன்று பட்டு, அவர்களுடைய வருத்தத்தைப் போக்குபவர்கள் யாவரோ அவர்களே, எவரிடத்தும் மேன்மக்களாகின்ற தன்மை உடையவர்களா வார்கள்.

“தம்மை நாடிவந்த உறவினரின் தகுதி உறவு வேறு பாடுகளை மனங்கொள்ளாது, அனைவருக்கும் ஒருப்போலவே உதவுதல் வேண்டும் என்பது கருத்து. தொலை மக்கள்-வளம் நீங்கித் தளர்ந்த மக்கள்.

206. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்

அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின், உப்பிலிப் புற்கை, உயிர்போற் கிளைஞர்மாட்டு எக்காலத் தானும் இனிது. பொற்பாத்திரத்திலே இட்டுள்ள, புலிநகம் போன்ற வெண்மையான சோற்றைச், சர்க்கரையும் பாலும் கலந்து, அன்பில்லாதவருடைய கையினின்றும் பெற்று உண்பதைக் காட்டினும் உப்பும் இல்லாத புல்லரிசிக் கூழினை, உயிர்போல அன்புகாட்டும் உறவினரிடத்தே எந்தப் பாத்திரத்திலேனும் பெற்று உண்பதுவே இனிதாயிருக்கும். * அக்காரம்-சர்க்கரை அமர்தல் - அன்பு காட்டுதல். ‘உணவின் இனிமை அளிப்பவரின் அன்பின் தகுதியை நோக்கியே அமைவதாகும்; அதனால், அன்புடனேயே அனைவருக்கும் உதவுக’ என்பது கருத்து.