பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 115.

- ‘உளங்கலந்த நண்பர்கள் பல நாட்களாகப் பிரிந்திருக் கிறார்கள் எனக் கருதி, எவரும் அவர் நட்பை வெறுத்து விடுவதில்லை. பல நாளும் அருகிலேயே இருந்தாலும் உள்ளம் கலவாதவரோடு அறிவுடையவர் நட்புக் கொள்வதும் இல்லை’ என்பது கருத்து. உள்ளங்கலத்தலே நட்பு என்பது பொருள்.

215. கடையாயர் நட்பிற் கமுகனையர்; ஏனை

இடையாயார் தெங்கின் அனையர்; தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன்று, இட்டஞான் றிட்டதே தொன்மை உடையார் தொடர்பு.

கீழ்த்தரமானவர்கள் நட்புச்செய்வதிலே ஒருநாள் உபசரணை தவிர்த்தாலும் பயன்கெடுகின்ற கமுகு மரத்தைப் போன்றவர்கள். மற்றை நடுத்தரமானவர்களோ, இடையிடை உபசரணை இல்லாமற் போனால் பயன்கெடும் தென்னை மரத்தைப் போன்றவர்கள். முதற்றரமானவர்களாகிய பழமைப் பண்புகளிலே சிறந்தவர்களுடைய நட்போ எண்ணுதற்கும் அருமையான பனைமரத்தைப் போன்று நட்ட அக்காலத்தின் தன்மை போன்றே, உபசரணை செய்தாலும் செய்யா விட்டாலும் ஒரே தன்மையாக என்றும் பயன்தருவதாயிருக்கும்.

‘முதற்றரமானவரோடு கொள்ளும் நட்பே சிறந்தது’ என்பது கருத்து.

216. கோட்டுப்பூப் போல மலர்ந்து, பிற் கூம்பாது, வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி, தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து, பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல்.

மரக்கிளைகளிலே பூத்திருக்கும் மலர்களைப் போல, முன்மலர்ச்சி பெற்றது பின் குவிதல் என்றில்லாமல், முதலில் விரும்பியது போலவே என்றும் மாறாத விருப்பமுடைய தாயிருப்பதே, நட்பினை முறையே பேணிக் காத்தல் ஆகும். தோண்டப்பட்ட நீர்நிலையிலேயுள்ள நீர்ப் பூக்களைப்போல, முதலிலே முகமலர்ந்து முகம் குவிக்கின்றவர்களை விரும்பு கிறவர்களும், அவர்களோடு நட்புச் செய்கிறவர்களும் எவருமே இவ்வுலகத்தில் இல்லை.

‘முதலிலே கொண்ட நட்பு என்றும் மாறாமல் இருக்க வேண்டும்; அதுவே உண்மையான நட்பு’ என்பது கருத்து. கேடுகொம்பு கிளை கூம்புதல் - குவிதல், கயம்-குளம், நீர்நிலை.