பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நாலடியார்-தெளிவுரை

இன்றியமையாததாகும். மனிதன் பலகாலமும் பல்வேறு வகையான உணர்ச்சிகளின் பிடிகளில் சிக்குண்டு, நிலை தடுமாற்றம் அடைகின்றவன். அதனால் அவன் பிழை செய்தலும் ஒரொரு சமயம் இயல்பே. அதனைப் பொறுத்துக்கொள்ளும் பண்பே சிறந்த நட்பின் இலக்கணமாகும் என்பது இது.

221. நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும், அடக்கிக் கொளல் வேண்டும், நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு. - ‘நல்லவர்கள்’ என்று நாம் மிகவும் விரும்பி நண்பராகக் கொண்டவர்களை, அவர்கள் அப்படிப்பட்ட நல்லவர்கள் அல்லாதவராகவே இருந்தாலும், அதனைப் பொறுத்து உள்ளத்திலேயே அடக்கிக் கொள்ளுதல் வேண்டும். நெல்லுக்கும் உமி உண்டு; நீருக்கும் நுரையுண்டு; பூவிற்கும் புன்மையான புறவிதழ்கள் உண்டு. அதுபோலவே நல்லவர்களிடமும் சில குற்றங்குறைகள் இருக்கவே செய்யும் என்று கருதுதல் வேண்டும்.

‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்ற கருத்தைக் கூறுவது இது. இதனால் நட்பினரின் குற்றங் குறைகளைப் பொறுத்தல் கூறப்பட்டது.

222. செறுத்தோறு உடைப்பினும், செம்புனலோடு ஊடார்,

மறுத்தும் சிறைசெய்வர், நீர்நசைஇ வாழ்நர்; வெறுப்ப வெறுப்பச் செயினும், பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.

அடைக்க அடைக்க அணையை உடைத்துக் கொண்டு போனாலும், நல்ல நீரோடு பிணக்கங் கொள்ளாதவர்களாக, நீர்வளத்தை விரும்பி வாழும் உழவர்கள் மீண்டும் அதனை அணையிட்டுத் தேக்கிப் பயன் பெறுவார்கள். அதுபோலவே, தாம் விரும்பி நண்பராகக் கொண்டவர்களுடைய தொடர் பினையும், அவர் வெறுக்கும்படியான செயல்களை அடுத்தடுத்துச் செய்தாலும் அவரோடு பிணங்காது, பொறுத்துக் கொண்டே பேணுவார்கள் அறிவுடையோர்.

‘நீரால் வயலிலே விளைவினைப் பெருக்கிக்கொள்ள விரும்புபவர் போலவே, நட்பினால் நன்மைபெற விரும்புபவரும், நட்பினரின் பிழைகளைப் பொறுத்தல் வேண்டும்’ என்பது கருத்து.