பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - .

இந்த வாழ்த்து, மனிதப் பிறவியினராகிய நாம், பகுத்தறிவு உடையவரேயானாலும், நம்முடைய பிறப்பின் உண்மையினையும், மறைவின் வருகையினையும் அறியாத அறியாமையினையும் உடையவர்களாக இருக்கின்றோம். அப்படியிருப்பதனால் இந்த உடல் வீழ்வதற்கு முன்னரே அதன் நிலையாமைத் தன்மையினைத் தெளிவாக உணர்ந்து, நல்லொழுக்க நன்னெறிகளிலே நிலைத்த ஈடுபாட்டுடன் நிற்கவேண்டும். அதற்குக் கடவுள் நினைவினை நீங்காது மனங்கொள்ளல் இன்றியமையாதது என்று கூறுவதாகும்.

வானிடு வில்லின் வரவறியா, வாய்மையால்,

கானிலந் தோயாக் கடவுளை - யாம்நிலம்

சென்னி யுறவணங்கிச் சேர்தும், ‘எம் உள்ளத்து

முன்னியவை முடிக!’ என்று.

வானமானது, தன்பால் இட்டுத் தோன்றுகின்ற

வானவில்லின் வரவை இன்ன காலத்தது என்றும், இன்ன காரணத்தது என்றும் அறியமாட்டாது. அதுபோலவேதான் உயிர்களாகிய நாமும், உடலின் வரவையும், அதனை இழக்கும் நிலையையும் பற்றி ஏதும் அறியமாட்டாதவர்களாக இருக்கின்றோம். அதனால், தான் அருள் திருமேனி உடைமை யினால், தரையிலே தன் கால்படியாதவனாக விளங்கும் கடவுளை, ‘யாம் எண்ணியவை அனைத்தும் இப்பிறவி யினுள்ளேயே வந்து நிறைவேறுவதாக’ என்று கருதி, எம் தலையானது தரையிலே பொருந்தும்படியாகப் பணிந்து உண்மையாகவே எம் உள்ளத்துள் அவனைச் சேர்த்துக் கொள்வோமாக.

இப்படிப் பதுமனார் இறைவனருளை வேண்டுகின்றார். இவ்வாறு இறைவனின் திருவடிகளை உள்ளத்துட் கொள்வது தான் சிறப்பு என்பதனைத் திருக்குறள் கடவுள் வாழ்த்தும் உரைக்கும். ஒழுக்கத்தின் முதன்மை. உயரிய கடவுள் நினைவினை உள்ளங்கொள்ளுதலும் அந்நினைவோடு வாழ்வை வகுத்து வாழ்தலுமாகும் என்பதே ஆன்றோர் முடிபு.