பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - நாலடியார்-தெளிவுரை

நுட்பமான அறிவுடையவர்களுடனே சேர்ந்து, அவர்களுடைய அறிவுப்பயனை அநுபவிக்கும் தன்மையானது விண்ணுலக இன்பத்தையே ஒத்ததாக விரும்பப்படும் தன்மையினை உடையதாகும். நுட்பமான நூல்களை அறிந்த அறிவினை இல்லாதவர்கள் ஆகிய பயனற்றவர்களோடு நட்புக் கொள்ளுதல் நரகத் துன்பங்களுள் ஒன்றாகவே இருக்கும்.

இதனால், நுண்ணுரல் உணர்வில்லாதவரோடு கொள்ளும் கேண்மை கூடாநட்பு என்பது கூறப்பட்டது.

234. பெருகுவது போலத் தோன்றி, வைத் தீப்போல்

ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும், - அருகெல்லாம் சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட! பந்தம் இலாளர் தொடர்பு.

அருகாமையான இடங்களிலே எல்லாம், உயர்ந்த சந்தன மரச்சோலைகளை உடைய, மலைச்சாரல்கள் மிகுந்த நாட்டிற்கு உரியவனே உள்ளத்திலே நட்பென்னும் பிணிப்பு இல்லாதவர் களுடைய தொடர்பானது, வைக்கோலிற் பற்றிய நெருப்பைப் போல, முதலிலே பெருகுவதுபோலத் தோன்றினாலும், ஒருபோதும் பயன்படாமல், இறுதியில் தானாகவே கெட்டுவிடும்.

உள்ளப் பிணிப்புக் கொள்ளாதவர் தொடர்பு கூடா நட்பு என்பது கூறப்பட்டது. நந்தும் - கெடும். வை - வைக்கோல்.

235. செய்யாத செய்தும் நாம் என்றலும், செய்வதனைச்

செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும். - மெய்யாக இன்புறுஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும், அந்நிலையே துன்புறுஉம் பெற்றி தரும். தம்மால் செய்ய இயலாத காரியங்களைத் தாம் செய்து விடுவோம் என்று சொல்லுதலும், தம்மாற் செய்யக் கூடியவற்றைக் காலத்தாற் செய்யாது காலந்தாழ்த்திக் கொண்டு வீண்பொழுதாகக் கழித்தலும் ஆகிய இவ்விரண்டும், உண்மையாக உலக இன்பங்களை அனுபவிக்கும் தன்மைகளை வெறுத்த துறவு வாழ்வினர்க்குங்கூட, அந்த அளவானே துன்பந்தருகின்ற தன்மையையே கொடுப்பனவாம்.

‘செய்யக் கூடாததைச் செய்வோம் என்று கூறுபவர் ஆசை காட்டி மோசம் செய்வர்; செய்யக் கூடியதை உரிய காலத்துச் செய்யாதவர் உண்மை அன்பினராகார்; இத்தகையோர் . தொடர்பு கூடாது என்பது கருத்து. -