பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நாலடியார்-தெளிவுரை * *

‘மரக்கலம் ஒரு துறையினின்றும் புறப்பட்டுப் பல விடங்களினும் சென்று வாணிகம் செய்து ஈட்டிய பொருள்களுடன் மீண்டும் கரை வந்து சேர்வது போல, அவன் வாழ்வும் கடைத்தேறியது என்பது கருத்து.

26. அறிவு இன்மை

அறிவு உடைமையே மனிதனுக்குச் சிறந்த நல்வாழ்வைத் தருவதாகும் என்பது பற்றிய செய்திகளை முன்பகுதியிலே நாம் பார்த்தோம். ஆகவே, அறிவின்மை பற்பல கேடுகளுக்குக் காரணமாகும் என்பதும் சொல்லாமலே உணரப்படும். எனினும், அறிவின் சிறப்பினை நன்கு கூறும் வகையால், முதலில் உடன்பாடாகக் கூறப்பட்ட உண்மைகளே, இப்போது எதிர்மறையாகவும் கூறப்படுகின்றன.

‘அறிவின்மை என்பது இயற்கையான நுண்ணறிவு இல்லாத தன்மையையும் குறிக்கும்.

காரிய காரணங்களைப் பகுத்தறியும் தெளிவு இல்லாத காரணத்தால் இம்மை இன்பங்களை எல்லாம் பெற முடியாதவனாகி விடுவதுடன் மறுமை இன்பத்தையும் இழந்துவிடுபவன் ஆவான் ஒருவன் என்று அறிதல் வேண்டும்.

251. நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃதுடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; -எண்ணுங்கால் பெண்ணவாய், ஆணிழந்த பேடி அணியாளோ, கண்ணவாத் தக்க கலம்?

நுட்பமான அறிவுத்திறன் இல்லாமல் இருப்பதுதான், ஒருவனுக்கு வறுமை என்று கூறப்படுவதாகும். அந்த அறிவை உடைமையோ, மிகவும் வளர்ச்சி பெற்ற பெருஞ்செல்வமாகும். எண்ணிப் பார்ப்போமானால், பெண் தன்மையை விரும்பி, ஆண் தன்மையை இழந்து விட்ட பேடியானவள், கண்கள் விரும்பும்படியான கவர்ச்சி மிக்க ஆபரணங்களை அணியமாட்டாளோ?

அறிவுதான் சிறந்த செல்வம்; அஃதற்றோர் செல்வம் எல்லாம் டேடியின் புனைவுகள் பெண்மையாகத் தோன்றினும் பெண்மையாகாதது போலச் செல்வம் போலத் தோன்றினும் செல்வம் ஆகாது என்று அறிதல் வேண்டும்.