பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 143

‘பகுத்து உண்டு வாழாதவன் மறுமையில் சுவர்க்கம் சேரான் என்பது இது நட்டார் உறவினரையும், நள்ளாதார்’ விருந்தினரையும் குறிக்கும். இம்மையாற் புகழையும் மறுமையில் இன்பத்தையும் கருமி இழந்து விடுகிறான் என்பதும் கூறப்பட்டது.

272. எத்துணை யானும், இயைந்த அளவினால், சிற்றறம் செய்தார் தலைப்படுவர்; மற்றைப் பெருஞ்செல்வம் எய்தியக்கால், பின்னறிதும் என்பார் அழிந்தார், பழிகடலத் துள். எவ்வளவேயாயினும், தத்தமக்கு இயைந்த அளவினால், சிறிய தருமங்களையாயினும் செய்து வந்தவர்கள் எக்காலத்தும் மேன்மை அடைவார்கள். அங்ஙனம் இல்லாமல், தம்மிடத்தே பெருஞ்செல்வமானது வந்து அடைந்த காலத்திலே தருமஞ் செய்யாமல், பின்னர் அதுபற்றிக் கருதுவோம்’ என்றிருப்பவர் கள், உலக நிந்தனையாகிய கடலிலே சிக்கி அழிந்தவர்கள் ஆவார்கள்.

‘ஈபவர்கள் பெருமையும் ஈயாத உலோபிகள் சிறுமையும் அடைவார்கள்’ என்பது கருத்து. தலைப்படல்-மேன்மைப் படுதல். பழிகடலம்-பழிச் சொற்களாகிய கடல்; கடலளவான பழிச்சொற்களின் மிகுதி.

273. துய்த்துக் கழியான், துறவோர்க்கொன் lகலான்,

வைத்துக் கழியும் மடவோனை,-வைத்த பொருளும் அவனை நகுமே உலகத்து அருளும் அவனை நகும்.

அருமையாகப் பெற்ற செல்வத்தைத் தான் அநுபவித்து வாழாமலும், அச்செல்வத்தினால் துறக்கப்பட்ட செல்வமற்ற வறியவர்களுக்குக் கொடுத்து உதவாமலும், வீணாகச் சேமித்து வைத்து இறந்து போகின்ற அறியாமை உடையவனாகிய அந்தக் கருமியைப் பார்த்து, அவன் தேடிவைத்த செல்வமும் சிரிக்கும்; உலகத்திலே விளங்கும் கருணை என்னும் பண்பும் சிரிக்கும்.

பெற்றதன் பயனைத் தான் அநுபவிக்காததனால் செல்வமும், அருளுடையவனாகும் வாய்ப்பு இருந்தும் அதனை இழந்ததனால் அருளும், அவனைப் பார்த்துச் சிரிக்கும் என்று கொள்க.