பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - நாலடியார்-தெளிவுரை

8. செல்வர்யாம்’ என்று, தாம் செல்வழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம்-எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி, மருங்கறக் கெட்டு விடும். - “யாங்கள் செல்வர்கள்’ என்று அகங்காரம் கொண்டவர்களாகத் தாம் இறந்தபின் செல்லவேண்டிய இடத்தைப் பற்றி எண்ணாதவர்கள் எல்லாரும், அற்பமான புத்தியினை உடையவர்கள். அப்படிப் பட்டவர்களுடைய பெருஞ்செல்வம் எல்லாம், இரவிலே கார்மேகமானது வாய்திறப்பதனால் தோன்றுகின்ற மின்னலைப்போலச் சிறிதுபொழுதே ஒளியுடன் தோன்றிப் பின்னர் இருந்த இடமே தெரியாமல் முற்றிலும் அழிந்துபோய்விடும்.

‘செல்வச் செருக்கினாலே அறத்தின் பயனை மதியாத அற்பர்களுடைய செல்வம் விரைவிலேயே அழிந்து போகும்’ என்பது கருத்து. செல்வுழி-செல்லும் இடம்; வீடு. புல்லறிவுஅற்பமான அறிவு, கருங்கொண்மூ-கார் மேகம்.

9. உண்ணான், ஒளிநிறான், ஓங்குபுகழ் செய்யான், துன்னருங் கேளிர் துயர்களையான், - கொன்னே வழங்கான், பொருள் காத் திருப்பானேல், அஆ இழந்தான் என் றெண்ணப் படும். தானும் வயிறார நன்றாகச் சாப்பிட மாட்டான், தன்னிடத்தே ஒளியானது நிலைபெற்றிருக்குமாறு தன்னை ஆடையணிகளாற் புனைந்தும் இன்புற மாட்டான்; வளரும்படியான புகழைத் தரும் செய்கைகளையும் செய்ய மாட்டான்; சேர்வதற்கு அருமையான உறவினர்களுடைய துயரங்களையும் போக்கமாட்டான். தன்னை யாசித்து வந்தவர்களுக்கு வழங்கவும் மாட்டான்; இப்படி, ஒருவன் எதையும் செய்யாமல் வீணாகப் பொருளையே பெரிதென்று பூதம் காப்பதுபோலக் காத்துக் கொண்டிருப்பானானால், ஐயோ! அந்தப் பொருளை அவன் இழந்துவிட்டான் என்றே சான்றோரால் எண்ணப்படுவான்.

செல்வத்தின் பயனை அவன் அநுபவிக்காததனால், அது இருந்தும் அவனளவில் இல்லாததாகி விடுகிறது. ஒளி-விளக்கம். கொன்னே-வீணே, துன் அரும்-சேர்தற்கு அரிய,