பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 21

27. படுமழை மொக்குளிற் பன்காலும் தோன்றிக்

கெடுமிதோர் யாக்கை யென் றெண்ணித்-தடுமாற்றம் தீர்ப்போம் யாம் என்றுணருந் திண்ணறி வாளரை நேர்ப்பார் யார், நீணிலத்தின் மேல்? வீழ்கின்ற மழைநீரிலே தோன்றும் குமிழிகள் போலப் பன்முறையும் தோன்றித் தோன்றி அழிகின்ற நிலையாமையை உடையது இந்த உடல். இப்படி எண்ணி, இப்பிறவியிலே குறுக்கிடும் தடுமாற்றங்களை யாம் போக்கிக் கொள்வோம் என்று அறிந்து உணர்கின்ற உறுதியான அறிவுடையவர்களை ஒத்திருப்பவர்கள், இந்தப் பெரிய உலகத்தின்மேல் வேறு யாவர் இருக்கின்றார்கள்?

மொக்குள்-குமிழி; முகை போல்வது. தடுமாற்றம் - மனமாயையால் வரும் தடுமாற்றங்கள். திண்ணறிவுதிண்மையான அறிவு. நீணிலம்-பரந்த உலகம். அவரை ஒப்பவர் எவருமில்லை என்றதால், அத்தகையவர் அல்லாதாரின் புன்மையும் உணரப்படும்.

28. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம்பெற்ற

யாக்கையால் ஆய பயன்கொள்க;-யாக்கை மலையாடும் மஞ்சுபோல் தோன்றி, மற்றாங்கே நிலையாது நீத்து விடும்.

உடலானது, மலைமுகடுகளிலே தவழ்ந்து செல்லும் வெண்மேகம் போலத் தோன்றி, அவ்விடத்திலே நிலைத் திராமல், அதனைக் கைவிட்டுப் போய்விடும் தன்மையது. அது போலவே, உயிரும் உடற்கூடெடுத்துத் தோன்றிப்பின் அதனைக் கைவிட்டுப் போய்விடும் இயல்பினை உடையது. அதனால் உடலினை உறுதி உடையதாகப் பெற்றவர்கள், தாம் பெற்ற அந்த உடலால் ஆன நல்ல பயன்களை எல்லாம் உடனேயே நிறைவேற்றிக் கொள்வார்களாக!

“உடல் தளர்ந்து உயிர் போய்விடுவதற்கு முன்பே, நற்செயல்களிலே ஈடுபட்டு உயிருக்கு உறுதிதேடிக் கொள்ள வேண்டும்’ என்பது கருத்து. மஞ்சு வெண்மேகம். யாப்புவலிமை. ஆய பயன்-பெறுவதற்குரிய சிறந்த பயன். நீத்து விடும்கைவிட்டுப் போய்விடும்.

29. புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி, இன்னினியே செய்க அறவினை- இன்னினியே