பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - நாலடியார்-தெளிவுரை

‘புலனிச்சைகளினால் மனம் சிதறாமற்படிக்கு, உள்ளத்து உறுதியுடன் தவநெறியிலே ஈடுபடுகிறவன் தவறாமல் முத்தியடைவான்; பிறர் அடையார் என்பது கருத்து. கைவாய்ஒழுக்கநெறி; துறவு நெறி. வீடு-முத்தி நிலை.

60. துன்பமே மீதூரக் கண்டும், துறவுள்ளார்

இன்பமே காமுறுவர், ஏழையார்;-இன்பம் இசைதோறும், மற்றதன் இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதாம், மேல்.

துன்பங்களே நாளும் நாளும் வந்து கொண்டிருப்பதைக் கண்டும், இல்வாழ்வினைத் துறந்துவிடுதலைப் பற்றி நினையா தவராக, அந்த இல்வாழ்விற் கிடைக்கும் சிற்றின்ப சுகத்தையே அறிவற்றவர்கள் பெரிதும் விரும்புவார்கள். மேலானவரோ, இன்பம் வந்து வாய்க்கும் பொழுதெல்லாம், அதனால் பின்வரும் துன்பத்தையே நினைந்து, இன்பத்தின்பால் ஆசை கொள்வதை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள்.

“துன்பம் நேர்தலை அறிந்தும், கிடைக்கும் இன்பத்தை மட்டுமே விரும்பி, அந்தத் துன்பத்தையும் பொருட்படுத்தாது இல்வாழ்வை மேற்கொள்பவர் ஏழையர்; இன்பம் நெருங்கி வருந்தோறும், அதன் இன்னாமையை அறிந்து அதன்மேல் மனம் செலுத்தாதவர் மேலோர்’ என்பது கருத்து. பசைதல்-பற்று வைத்தல். பரிதல்-மேற்கொள்ளல்.

7. சினம் இன்மை

துறவு நெறியிலே மனம் செலுத்துபவர், மிகவும்

முதன்மையாகக் கொள்ளவேண்டிய பண்பு, சினம் கொள்ளாதிருத்தல். துறவினால் பெற்ற மன உறுதியும் ஆற்றல்களும் சினம் எழுந்தகாலத்து முற்றவும் அழிந்துவிடும். அத்துடன், அதனால் பலரும் துன்புறுதலும் கூடுமாதலால், அதனை ஒழிப்பதன் முதன்மையை எல்லா அறநூல்களுமே வற்புறுத்தும். திருக்குறளின் வெகுளாமையும் இதனையே கூறும்.

“சினம் இன்மை” என்பது,"பிறர் அறிந்தோ அறியாமலோ, நடந்துகொண்ட விதத்தால் சினம் கொள்ளவேண்டிய நிலைமையானது எழுந்தாலும், அப்போதும் சினத்தை எழாமல் தன்னுள்ளே அடக்கி, அவர்மீது இரக்கங் கொள்ளுதல்” என்று அறிதல் வேண்டும். -