பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 63

முற்பிறப்பிலே அவர் செய்த தீவினையால் வந்து நிகழ்வது என்று அறிவாயாக.

‘அறிவுடையோரும் ஒரொருகாலத்துத் தீய செயல்களிலே ஈடுபடுவது, அவர்களுடைய முற்பிறப்பிற் செய்த வினைகளின் காரணமாகவே’ என்பது கருத்து.

109. ஈண்டுநீர் வையத்துள், எல்லாரும், எத்துணையும் வேண்டார்மன், தீய விழைபயன், நல்லவை; வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால தீண்டா விடுதல் அரிது.

நெருங்கிய கடலினாலே சூழப்பட்டிருப்பது இந்த உலகம். இதனுள்ளே, எவ்வெவர்களும் எவ்வளவாயினும் தீயவைகளை விரும்பவே மாட்டார்கள். நன்மைகளே அனைவரும் விரும்பும் பயனாகும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நன்மையோ தீமையோ ஒருவருக்கு வரத்தக்கவை அவரை வந்து அடையாமற் போவது மட்டும் இல்லையாகும்.

‘ஒருவருடைய விருப்பமோ வெறுப்போ எப்படி யிருந்தாலும், முன்வினைப்பயன் வந்து தவறாமல் நிகழ்ந்தே தீரும் என்பது கருத்து.

110. சிறுகா, பெருகா, முறை பிறழ்ந்து வாரா,

உறுகாலத் தூற்றாகா, ஆமிடத்தே யாகும் சிறுகாலைப் பட்ட பொறியும்; அதனால், இறுகாலத்து, என்னை பரிவு?

உயிர் உடலின் அடைகின்ற அந்தச் சிறிய அளவு நேரத்தில்தானே உண்டாகிய ஊழ்வினைகள் எல்லாம் ஒரு போதும் குறையவும் மாட்டா, கூடவும் மாட்டா. அவை, முறைமை தப்பியும் வருவதில்லை. துன்பம் வந்த காலத்திலே ஊன்றுகோலாக எதுவும் உதவவும் மாட்டா. அவை வரவேண்டிய காலத்திலே வந்து சேரும். அதனால் அப்படி நேரும் துன்பங்களைக் குறித்து அவற்றாற் கேடுறும் காலங்களிலே மனம் வருந்துவது எதற்காகவோ?

‘கருவிலேயே வினைப்பயன் விதிக்கப்படுவதனால், எவரும் அதனின்றும் தப்பவே முடியாது; அதனை அநுபவித்தே தீரவேண்டும்’ என்பது இது. பொறி-தலை எழுத்து என்று சொல்லப்படும், ஊழின் நியமம்.