பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 73 பொருட்பால்

‘தனி மனிதன் அறநெறியிலே நின்று ஒழுகுதல் வேண்டும்’ என்பது, அறத்துப்பாலிலே வற்புறுத்தப்பட்டது. அத்தகைய அறநெறியின் வழிப்பட்டுவரும் பொருளினைப் பற்றிய செய்திகளைக் கூறுவதாகப் பொருளியல் வாழ்வை விளக்குவது இந்தப் பகுதி.

தன்னுடைய இல்வாழ்வின் நுகர்ச்சிக்கு உதவுவது பொருளே என்பதுடன், ஒருவனுடைய புகழ்வாழ்வுக்குரிய செயல்களைச் செய்வதற்கும் அதுவே உதவியாக விளங்குகிறது. அதனால், அதனைத் தவறாது பேணிக் கொள்ளுதலும் தவறாகாது என்பதே ஆன்றோர் கருத்தாகும்.

இந்தப் பொருட்பால் ஏழு இயல்களாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படும். அரசியல் ஏழு அதிகாரங்கள், நட்பியல் நான்கு அதிகாரங்கள், இன்பவியல் மூன்று அதிகாரங்கள், துன்பவியல் நான்கு அதிகாரங்கள், பொதுவியல் ஓர் அதிகாரம். ஆக மொத்தம் பத்தொன்பது அதிகாரங்கள் இதன்கண் விளங்கும். அவற்றுள் முதலாவது கூறப்படுவது அரசியல்.

1. அரசியல்

அரசியலாவது, அரசநெறியை நடாத்தி வரும் நாட்டுத் தலைவனுக்குரிய தன்மையை விளக்கிக் கூறும் பகுதி.

உலகிலே, மக்கள் அனைவரும் பசியும் பகையும் ஒழிந்தவர்களாக வசியும் வளனும் பெற்றவர்களாக, இன்புற்று வாழ வேண்டுமானால், அவர்களைத் தலைமையேற்று நடத்திச் செல்லுவோன் ஒருவனும் வேண்டும். அவன், மக்களின் பாங்கினை நன்கு உணர்ந்தவனாகவும், தான் ஏற்றிருக்கும் தலைமையினை முறையே நிறைவேற்றிச் செல்வதற்குரிய தகுதிகளை உடையவனாகவும் விளங்குதலும் வேண்டும்.

தகுதியற்ற தலைமையின்கீழ், நாட்டின் நிலை சீர்குலைந்தே போகும். பலருடைய வாழ்வும், அந்தத் தலைவனின் தகுதியையும் ஆற்றலையும் பொறுத்தே விளங்குவதனால், - அவனுடைய தகுதியை ஆராய்வதும் வகுத்துக் கூறுவதும் சான்றோர் கருத்தாயிற்று. அதனை நாமும் காணலாம்.