பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


கர்வம் பிடித்தது இந்த மண்டை ஓடு; குழிந்து ஆழ்ந்து கண்டார் அஞ்ச அது சிதைந்து கிடக்கிறது. அப்பொழுதும் அது சிரிப்பதுபோல் அதன் பற்கள் விரிந்து கிடக்கின்றன. "ஏய்! நான்தான் நீ காதலித்த கண்ணம்மா என்னைக் கடித்துத் தின்னத் துடித்துக் கிடந்தாய்; படித்துவைத்த பழங்கவிதை, அன்று மடித்து வைத்த புகையிலை. காரம் மணம் இன்று செத்துவிட்டன. என்னைக் கண்டுதான் நீ கற்கண்டு என்றாய்; சுவைத்தாய்; மிகைத்தாய், நகைத்தாய் உன் பெற்றோர்களையும் பகைத்தாய். நான் இப்பொழுது மண்டை ஓடு, இருப்பது சுடுகாடு, நான் தனிமையில் தான் இருக்கிறேன். வந்தால் இனிமையாகப் பொழுது கழிக்கலாம், பேய் வரும் என்று அஞ்சுகிறாயா! அஞ்சாதே, அதுவும் என்னைக் கண்டு ஓடி விடும், நானா அழகி? யோசித்துக்கூறு"

முடைநாற்றம், அடைமழை பெடைக் கழுகு; உடன் அதன் இணைப்பறவை இவை என்ன செய்கின்றன. குத்தித் குத்திக் குருதியைச் சுவை பார்க்கின்றன; தத்தித் தத்தி ரணப்படுத்தி நிணத்தில் முழுகுகிறது. கணத்தில் அந்த உடலும் மறைகிறது, இது யார்? உன் ரசிகை; இப்பொழுது அவள் இந்தப் பறவைகளுக்கு ருசிகை.

நீ விரும்புவது இந்த உடல்; அதனைத் தழுவும் அற்ப ஆசையை நீ விடுக; நான் தெரிவிக்கும் மடல் இது:

காயம் இது பொய்; மாயம் நீ காண்பது, அறம் மெய்; அறிவு மெய்; உண்மை மெய். இம்மூன்றும் சேர்வதுதான் அழகு, அறிக ஆராய்க; மெய்ப்பொருள் காண்க.