பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


ஒருகன்னத்தில் உன்னை அறைந்தால் மறு கன்னத்தை அவனுக்குக் காட்டு. "இறைவா! அவனை மன்னித்துவிடு" என்று பாவமன்னிப்புக் கேள். அவன் பண்பு கொள்ளுவான்; பணிவுபெறுவான்; திருவள்ளுவன் ஆவான்.

அருள் உள்ளம் கொண்டு அனைவரிடமும் பழகுதல் சிறந்த துறவறமாகும். கண் பார்க்கத் துடிக்கிறது; செவி கேட்கத் துடிக்கிறது; மூக்கு நுகர்கிறது. மெய் பொய்யை நாடுகிறது. ஐந்து புலன்களும் உன் கட்டுக்கு அடங்காமல் காட்டு எருமையாகத் திரிகின்றன. இவற்றை நல்வழிப் படுத்திப் புன்மை அகற்றினால் நிச்சயம் நீ வீடு பெறுவாய்.

மனம் காத்தல் தூய்மைக்குவழி; அதுவே துறவுக்குத் திறவுகோல்.

இன்பம் இழுத்துப் பிடிக்கிறது; உன் வழி தடுத்து நிறுத்துகிறது. நீ செல்லும் பாதை நேர்வழி; இன்பம் உன்னைத் தடுக்கும் பேர்வழி அதனைப் பொருட் படுத் தாமல் கடமையை மேற்கொள்க. அது கடவுள் நெறி.

நாவின் சுவைக்கு அடிமையாவர் அவர் வெறியர், பூவின் சுவைக்குப் பின்போவார் அவர் பூஜ்ஜியர். நாதம் அஃது ஏதம்; உலக ஆசைகள் உன்னை விழுங்கும் பூதம். ஏணிப்படிகள் ஏறிச் சொர்க்கம் அடைய வேண்டிய நீ ஏன் இப்படிப் பாம்பின் வாயில் அகப்படுகிறாய். துறவு கொள்க அஃது உன்னை உயர்த்தும்.