பக்கம்:நாலு பழங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
பசித்த முனிவர்

வேறு ஓரிடத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தான். முனிவர் இட்ட சாபத்தால் அவனுக்குப் பொறுக்க முடியாத வயிற்றுவலி வந்துவிட்டது. துடித்துப் போனான், ஏதேதோ பச்சிலையைத் தின்று பார்த்தான். வயிற்றுவலி அடங்கவே இல்லை. மரத்தடியில் முனிவர் இருந்ததை அவன் பார்த்திருக்கிறான். அவரிடம் போனால் அவர் தன் வயிற்றுவலியைத் தம். முடைய தவவலிமையினால் தீர்க்கக்கூடும் என்று எண்ணி வயிற்றைப் பிடித்துக்கொண்டே அங்கே போனான்.

முனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். நல்ல வேளையாக மறுநாள் அவர் கண் விழித்தார். அப்போது அந்த வேடன் அவர் காலில் விழுந்து, முனிவர் பெருமானே, வயிற்றுவலியால் மிகவும் சங்கடப்படுகிறேன். தாங்கள் இதைத் தீர்த்து அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

முனிவர், "நீ இதற்கு முன் இங்கே வந்திருக்கிறாயா?" என்று கேட்டார். வந்திருக்கிறேன். இந்த மரத்தில் இருந்த பழத்தைத் தின்றேன். அதிலிருத்து வயிற்றுவலி பிடித்துக் கொண்டது" என்று அழுது கொண்டே சொன்னான்.

"அந்தப் பழம் எனக்காக இருப்பது. மூன்று மாசத்துக்கு ஒருதரம் நான் தவம் கலைந்து அந்தப் பழத்தை உண்டு பசி ஆறுவேன். போன முறை அந்தப் பழத்தைக் காணவில்லை. அதனால் பழத்தை உண்டவனுக்கு வயிற்று வலி உண்டாகட்டும் என்று சாபம் இட்டேன். என் சாபம் பலித்து விட்டது" என்று முனிவர் சொன்னார்.