பக்கம்:நாலு பழங்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
நாலு பழங்கள்

"சுவாமி! என்னை மன்னிக்க வேண்டும். நான் தெரியாமல் செய்து விட்டேன். இந்த வயிற்று வலியை நீங்கள் தீர்த்து வைத்தால் நான் உங்களுக்குக் காவலாக இருப்பேன். வேறு யாரும் இந்தப் பழத்தைத் தொடாதபடி பார்த்துக் கொள்வேன். ஐயோ! வயிற்றுவலி தாங்க முடியவில்லையே! சுவரமி! எப்படியாவது இதைப் போக்கி விடுங்கள்" என்று, வேடன் மறுபடியும் காலில் விழுந்து கெஞ்சினான்.

"உன் வயிற்றுவலியை நான் போக்கிவிடுகிறேன். ஆனால் அதற்கு நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். நான் சொல்கிற நிபந்தனையின்படி நீ நடந்து வர வேண்டும்" என்று முனிவர் கூறிய போது, "சுவாமி! நீங்கள் எதைச் சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். எப்படியாவது என் வயிற்றுவலியைத் தீர்த்தருள வேண்டும். இனிமேல் நான் உங்களுக்கு அடிமையாக இருப்பேன்" என்று வேடன் கதறினான்.

நான் சொல்கிற நிபந்தனை இதுதான். நீ இனி மேல் எந்த மிருகத்தையும் கொல்லக்கூடாது. பழம், காய், கிழங்கு, சோறு இவைகளையே சாப்பிட வேண்டும். எந்தப் பிராணியையும் அடித்துத் தின்னக் கூடாது. இப்படிச் சத்தியம் செய்து தருவாயா?" இப்படி முனிவர் கேட்டார்.

"இதோ, இப்போதே சத்தியம் செய்து தருகிறேன். என் தலைமேல் ஆணையாக, நான் எந்தப் பிராணியையும் கொல்ல மாட்டேன்; மாமிசத்தைத் தின்னவும் மாட்டேன்" என்று. வேடன் சத்தியம். செய்து கொடுத்தான்.