பக்கம்:நாலு பழங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

நாலு பழங்கள்

"அதோ பார்: தென்ன மரம் எவ்வளவு உயரமாக இருக்கிறது! தென்ன மரம் நிற்கிறது என்று சொல் பார்க்கலாம்" என்று அம்மா சொல்லிக் கொடுத்தாள்.

குழந்தை, "தென்ன மரம் நிற்கிறது, தென்ன மரம் நிற்கிறது" என்று உருப் போட்டது.

"பெருச்சாளி பார்த்திருக்கிறாயோ? அது சுவரையெல்லாம் குழி பறிக்கும். குடு குடு என்று ஓடும்" என்றாள் அம்மா.

"பெருச்சாளி என்றால் என்ன அம்மா?" என்று கேட்டது குழந்தை.

"எலி பார்த்திருக்கிறாய் அல்லவா? அது மாதிரிதான் இருக்கும். ஆனால் மிகவும் பெரிசாக இருக்கும்" என்றாள் தாய்.

"இவ்வளவு பெரிசாக இருக்குமா?" என்று குழந்தை தன் கையை விரித்துக் காட்டியது.

"ஆமாம், அவ்வளவு பெரிசாகத்தான் இருக்கும் என்றாள் அம்மா.

"ஆந்தை தெரியுமா?"

"தெரியாது."

"அது ஒரு பட்சி. கண் உருண்டையாக இருக்கும். கொட்டக் கொட்ட விழிக்கும்."

"ஆந்தை முழியன் என்று பக்கத்து வீட்டுப் பையனை யாரோ சொன்னார்கள்; கேட்டிருக்கிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/28&oldid=1084228" இலிருந்து மீள்விக்கப்பட்டது