பக்கம்:நாலு பழங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

நாலு பழங்கள்

இரவு வந்து விட்டது. ஆறு மணிக்கே சாப்பிட்டு விட்டுக் குழந்தை படுத்து உறங்கி விட்டது. ஆனால் பாதி ராத்திரியில் அதற்கு விழிப்புக் கொடுத்து விட்டது. தான் அறிந்த விஷயங்களைச் சொல்லிப் பார்க்கவேண்டும் என்று அதற்குத் தோன்றியது. பாடம் படிப்பது போல அந்த வாக்கியங்களைச் சொல்ல ஆரம்பித்தது.

அப்போது அந்த வீட்டில் திருடுவதற்கு இரண்டு திருடர்கள் வந்தார்கள். சுவரில் கன்னம் போட்டு உள்ளே புகுந்து திருடுவதாக எண்ணி வந்திருந்தார்கள்.

அப்போது குழந்தை சற்றுப் பலமாக, "தென்ன மரம் நிற்கிறது" என்றது. அந்த வார்த்தைகள் திருடர்களின் காதில் விழுந்தது.

"யாரோ விழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் போய் விடலாம்" என்று ஒரு திருடன் சொன்னான்.

"போடா பைத்தியக்காரா! இவ்வளவு தூரம் வந்து விட்டுச் சும்மா போவதா? ஏதோ குழந்தை தூக்கத்தில் உளறுகிறது. அதைக் கேட்டுப் பயப்படலாமா?" என்றான் மற்றொருவன்.

உடனே கன்னக்கோலை எடுத்துச் சுவரைத் துளை போட்டுப் பறிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போது குழந்தை, "பெருச்சாளி பறிக்கிறது" என்றது. அதைக் கேட்டுத் தைரியம் சொன்ன திருடனுக்கே சந்தேகம் வந்து விட்டது. உற்றுக் கவனித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/30&oldid=1084374" இலிருந்து மீள்விக்கப்பட்டது