பக்கம்:நாலு பழங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டபீர் சுவாமி

41

ஸ்ரீநிவாசையர் சொல்ல ஆரம்பித்தார்.

ஞ்சாவூரில் மகாராஷ்டிர அரசர்கள் ராஜ்ய பாரம் நடத்தி வந்த போது அவர்களுடைய உறவினர்கள் பலர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அரண்மனையிலிருந்து ஊதியம் கிடைத்து வந்ததோடு, இயல்பாகவே பொருள் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

இவ்வாறு வாழ்ந்து வந்த மகாராஷ்டிர கனவான்களுள் ஒருவர் மிகவும் சுறுசுறுப்புடையவர். அவருடைய வாழ்க்கைக்குப் போதிய வசதிகள் இருந்தாலும் அவரது சுறுசுறுப்புக்கு ஏற்ற வேலை இல்லாமையால் அவருக்கு உற்சாகம் குறையத் தொடங்கியது. அவருடைய மனைவியும் பிறரும் அரண்மனை உத்தியோகம் பெற்றுப் பார்க்கும்படி சொன்னார்கள். அரண்மனை வேலைக்கு ஏற்ற தகுதி அவரிடம் இல்லை. சாமானிய வேலைகளுக்குப் போகவும் அவருக்கு இஷ்டம் இல்லை.

இந்த நிலையில் அவர் தீவிரமாக யோசனை செய்யலானார். தம் கைப்பொருளைச் செலவு செய்தாவது ஏதேனும் உத்தியோகம் செய்யத்தான் வேண்டுமென்ற உறுதி அவருக்குள்ளே தோன்றியது. என்ன உத்தியோகம் செய்வது? யோசித்து யோசித்துப் பார்த்தார். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு நாளில் இருபத்து நாலு மணி நேரமும் வேலை செய்தாலும் செய்யும்படியான உத்தியோகம் ஒன்றைத் தாமே ஏற்படுத்திக் கொள்ள எண்ணிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/47&oldid=1084991" இலிருந்து மீள்விக்கப்பட்டது