பக்கம்:நாலு பழங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நாலு பழங்கள்

சாமான்ய மனிதனைப்போல ஆடை அணிந்து, தன் தலைநகரை விட்டுப் புறப்பட்டான்.

பல இடங்களுக்குப் போய்க் கடைசியில் ஒரு சிறிய ஊர் வழியே நடந்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் தன் தலையின் மேல் ஒரு சட்டியில், வயலில் வேலை செய்யும் தன் தந்தைக்குக் கஞ்சி எடுத்துக்கொண்டு போனாள். அவள் இயற்கையாகவே நல்ல அழகும் பலமும் உடையவளாக இருந்தாள். 'இவள் அழகுள்ளவளாக இருக்கிறாள். இவளை யாரென்று விசாரிக்கலாம்' என்று எண்ணிய அரசகுமாரன் அவளைப் பார்த்து, "ஏ பெண்ணே! உன் பெயர் என்ன?" என்று கேட்டான்.

அந்தப் பெண், "வெண்ணெய்!" என்றாள்.

"நவநீதமா?" என்று ராஜகுமாரன் கேட்டான்

"இல்லை; சாதாரண வெண்ணெய் அல்ல. மண் ணால் பண்ணாத சட்டியிலே, மரத்தால் பண்ணாத. மத்தாலே, மட்டையால் பண்ணாத கயிற்றாலே கடைந்தெடுத்தது. அந்த வெண்ணெய் இங்கே முன்பும் இல்லை; இன்றும் இல்லை; நாளைக்கும் இராது."

தேவலோகத்தில் - பாற்கடலில் மேரு மலையை மத்தாகக் கொண்டு வாசுகியைக் கயிறாக வைத்துக் கடைந்த அமுதத்தை அவள் குறிக்கிறாள் என்று ஊகித்துக் கொண்டான் ராஜகுமாரன்.

"அமுதவல்லியா?" என்று பிறகு கேட்டான்.

"ஆம்"' என்றாள் அந்தப் பெண். 

"யாருக்குக் கஞ்சி கொண்டு போகிறாய்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/54&oldid=1084998" இலிருந்து மீள்விக்கப்பட்டது