பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————

சாயம் பளபளக்க ஒய்யாரமாக நடந்து கான்வென்ட் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தாள்.

‘விர்’ரென்று வாயு வேகத்திலே ஒரு சிவப்பு வண்ண சைக்கிள் தபாலாபீஸிக்குள் போயிற்று. அதன்மேல் உட்கார்ந்திருந்த தந்திப் பியூனுக்கு ஏன்தான் அவ்வளவு தலை போகிற அவசரமோ? ஏதோ குதிரைப் பந்தயத்தில் குதிரையை ஒட்டிக் கொண்டு போகிற ‘ஜாக்கி’யைப் போல அசாத்திய வேகத்தில் ஓட்டிக் கொண்டு போகின்றான்.

மேற்கே ‘கூட்ஸ் ஷெட்’ வாசல் பார்சலில் வந்த சாமானை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு வருவதற்குத் தயாராக நின்றது ஒரு கை வண்டி அதன் பக்கத்தில் மூன்று பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் பார்சலின் சொந்தக்காரர். தூரத்திலிருந்து பார்த்த என் பார்வைக்கு அசப்பில் அவர் நான் அடிக்கடி மருந்து வாங்கச் செல்லும் ஒரு மருந்துக்கடையின் சொந்தக்காரர் போல் தோன்றினார். ‘கடைக்கு ஏதாவது மருந்துச் சாமான்கள் பார்சலில் வந்திருக்கும். எடுத்துக் கொண்டு போவதற்காக வந்திருப்பார்’ என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன். மற்றும் இரண்டு பேரில் ஒருவன் கைவண்டியை முன்புறமிருந்து இழுப்பவன்.இன்னொருவன் பின்புறமிருந்து தள்ளுபவன்.

பத்து மணி பன்னிரண்டு நிமிஷம், மூன்றரை செகண்டு ஆகியிருந்தது! 'கூட்ஸ்’ ஷெட்டிலிருந்து கைவண்டி கிழக்கு நோக்கிப் புறப்பட்டது. அதேசமயத்தில் தபாலாபீஸிலிருந்த அந்தத் தந்திப் பியூன் தன் சைக்கிளை அசுரவேகத்தில் மேற்கு நோக்கிச் செலுத்தினான். பாங்கு வாசற்படியிலிருந்து ‘டக் டக்’ என்று ஆள் இறங்கி வருவதற்கு அறிகுறியான பூட்ஸ் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கறுப்புக் கண்ணாடிக்காரர் தோல் பையும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அவர் ஏறிக் கொண்டதும் ஆட்டோ ரிக்க்ஷா கிழக்கு நோக்கிக் கிளம்பியது.

கிழக்கே பள்ளிக்கூடத்து வாசலிலிருந்து அந்த லிப்ஸ்டிக் அழகி கையில் ஒரு கத்தை பைல்களுடன் குடையை ஒயிலாகப் பிடித்துக் கொண்டு தெருவில் வடக்கு நோக்கி இறங்கினாள். கிழக்கே இருந்து ஒரு போலீஸ் லாரி வந்து கொண்டிருந்தது.

திடீரென்று மழை பெரிதாகப் பெய்யத் தொடங்கிவிட்டது. ‘சடசட’வென்று மழை ஓசை கடிகாரத்தை மீண்டும் பார்த்தேன். மணி சரியாகப் பத்தே கால்!

‘படார்’ என்ற பேரிடி போன்ற ஓர் ஓசை அதை அடுத்து ‘ஐயோ’ என்ற அலறல் ஒலிகள். திடுக்கிட்டுப் போய் தலைநிமிர்ந்து பார்த்தேன்.

பார்சல் சாமான்கள் வந்த கைவண்டியும், போலீஸ் லாரியும், இவை இரண்டுக்கும் நடுவே பாங்கிலிருந்து போன கறுப்புக் கண்ணாடிக்காரரின் ஆட்டோரிக்க்ஷாவும் சிக்கிக் கொண்டிருந்தன. இந்தப் பயங்கரமான மோதலில் சிவப்பு சைக்கிள் தந்திப் பியூனோடு வடபுறம் தூக்கி எறியப்பட்டிருந்தது. கையிலிருந்த பைல்கள் தண்ணீரில் சிதறி மிதக்க உடம்பெல்லாம் சேறாகி அலங்கோலமான நிலையில் தெருவில் நின்றாள் ஆங்கிலோ இந்திய அழகி.

கறுப்புக்கண்ணாடிக்காரரின் தோல் பை திறந்து அதிலிருந்து கத்தை கத்தையான புத்தம் புதிய நோட்டுகள் சிதறின. மருந்துக் கடை பார்சலில் சாதிக்காய்ப் பெட்டி