108. பனையூர் என்றொரு பல்கலைக்கழகம்
விமான நிலையத்துக்கு வந்திருந்த நண்பன்தான் அந்தக் கடிதத்தைச் சுகுமாரனிடம் கொடுத்தான். கடிதம் பெரியம்மா சொல்வது போல் பக்கத்து வீட்டுப் பெண்ணின் கையெழுத்தாலோ, அல்லது வேறு யாருடைய கையெழுத்தாலோ எழுதப்பட்டிருந்தது. பெரியம்மா அவனைக் கண்டிப்பாக ஒரு நடை கிராமத்துக்கு வந்து விட்டுப் போகச் சொல்லி எழுதியிருந்தாள்.
ஸ்டேட்ஸிலிருந்து பம்பாயில் வந்து இறங்கியதும் இறங்காததுமாக உடனே சென்னைக்குப் போய் அங்கிருந்து முந்நூறு மைலுக்கு மேல் ஓர் இரவு மேலும் ஒரு மணி நேரமும் இரயிலில் பயணம் செய்து கிராமத்துக்குப் போக வேண்டும் என்று நினைத்தபோதே சுகுமாரனுக்குச் சலிப்பாகவும் அலுப்பாகவும் இருந்தது. பெரியம்மா மிகவும் சாமர்த்தியமாக அவன் பம்பாய் வந்து இறங்கியதுமே நிச்சயமாக அவனைச் சந்திக்கிற ஓர் உறவுக்கார நண்பனின் விலாசத்துக்கு அந்தக் கடிதத்தை அனுப்பி, அவனிடம் வந்ததுமே சேர்க்கச் சொல்லியிருந்தாள். நண்பன் கர்மசிரத்தையாக, அந்தக் கடிதத்தை அவனிடம் சேர்த்ததோடு மட்டுமின்றிக் கிராமத்துக்குப் போய் விட்டு வரச் சொல்லி அவனை வற்புறுத்தவும் செய்தான்.
சலிப்பும் அலுப்பும் ஒருபுறம் இருக்கக் கிராமத்துக்குப் போய்ப் பெரியம்மாவைப் பார்க்க அவனுக்குக் கூச்சமாகவும், தயக்கமாகவும் இருந்தது. எதற்காக அழைத்திருப்பாள், என்ன கேட்பாள் என்பதையும் இங்கிருந்தே அவன் அனுமானிக்க முடிந்தது. ஜுலியோடு கிராமத்துக்குப் போவதா, தனியாகப் போவதா என்பதும் ஒரு சிந்தனைக்குரிய பிரச்னையாயிருந்தது. ஒருவேளை ஜூலியைப் பற்றிப் பேசுவதற்கும், கோபித்துக் கொள்வதற்குமே பெரியம்மா கூப்பிட்டிருந்தால், ஜுலியோடு அவள் முன் கிராமத்தில் போய் நிற்பது நன்றாயிராது. பெரியம்மாவுக்கும் அது எரிச்சலூட்டுவது போல் இருக்கும். அவன் யோசித்தான். மேற்படிப்புக்காகப் போன இடத்தில், அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் போது ஜுலியை அவன் காதலித்துத் திருமணம் புரிந்து கொள்ள நேர்ந்திருந்தது. இந்த விஷயம் முதலில் பம்பாயிலிருக்கும் தம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மெல்லத் தெரிந்து, அப்புறம் பராபரியமாகக் கிராமத்தில் இருந்த பெரியம்மாவுக்கும் எட்டியிருக்க வேண்டும் என்பதை அவனால் சுலபமாக அனுமானிக்க முடிந்தது.
“வயதான காலத்தில் உன் முகத்தை ஒரு தடவை பார்க்கணும்னு ஆசைப்பட்டு வரச் சொல்லி எழுதியிருக்கா. போயிட்டுத்தான் வாயேன். நீ வெளிநாடு போய்ப் படிக்கத் தேவையான பண உதவி பண்ணினதுக்காகவும் நீ உங்க பெரியம்மாவுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கே” என்றான் நண்பன்.