பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பரபரப்பாக ஒரு செய்தி

901

நிருபர் சாமிநாதனுக்கு அதில் மிகப் பெரிய ஏமாற்றம். அடித்த புயல் தந்திக் கம்பங்களை மட்டும் விட்டு விட்டு அடித்திருக்கக் கூடாதோ என்று ஏங்கி வருத்தப்பட்டார் நிருபர் சாமிநாதன். நிருபர் வேலையே சலிப்பாக இருந்தது அவருக்கு. “தந்தி அடிக்கிற மாதிரியோ, டெலிபோன் பண்ணுகிற மாதிரியோ, தினசரியின் முதல் பக்கத்திலே ஹெட்லைன் எட்டுக் காலம் தலைப்புப் போடுகிற மாதிரியோ அஞ்சாறு வருஷத்திலே ஒரு தடவை கூட இங்கே இருந்து ஒரு நியூஸ் அனுப்ப முடியாமல் இது என்ன நிருபர் வேலை வேண்டிக் கிடக்கிறது?’ என்று நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும், பிரமுகர்களிடமும் நிருபர் சாமிநாதன் அடிக்கடி அலுத்துக் கொள்வது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது.

“நிருபர் பதவிங்கிறது எங்கேயும், எப்போதும் நுழையறதுக்கு ஒரு பாஸ்போர்ட் மாதிரி. அதனால்தான் இதை வச்சிட்டிருக்கேன். நீர் என்னடான்னா மாதந்தவறாமே ‘அருளரசி அன்னை பரிசுத்தாதேவி குழுவினர் அலைக்கரைப்பட்டி விஜயம்’னு அவங்க வர்ரப்ப ஒரே தலைப்பிலே ஒரே விஷயத்தைக் கடந்த பல வருஷமாக் கொடுத்துக்கிட்டிருக்கீரு. அவங்க ஊர் திரும்பினதுமோ, அலைக்கரைப் பட்டியிலிருந்து ‘அருளரசிதேவியார் ஊர் திரும்பினார்’னும் ஒரு பழைய பல்லவிதான். எப்பத்தான் அருளரசி பரிசுத்தாதேவி அலைக்கரைப்பட்டிக்கு வரவில்லை என்றோ, வந்த பின் ஊர் திரும்பவில்லையென்றோ ஒரு நியூஸ் தரப்போ றீரு” என்று சாமிநாதன், சைவத் திருமுறைக் கழகக் காரியதரிசி சுப்புரத்தினம் பிள்ளையிடம் கேலி செய்து பேசும் போது, “அபசாரம்! அபசாரம்! அந்த மாதிரி நியூஸ் எல்லாம் என் கையிலேருந்து உமக்கு என்னிக்குமே கிடைக்காது” என்று சுப்புரத்தினம் பிள்ளை சிரித்துக் கொண்டே பதில் சொல்லி விட்டுப் போவார்.

1974ம் வருஷம் அக்டோபர் மாதத்தில், சுப்புரத்தினம் பிள்ளை நிருபர் சாமிநாதனைச் சந்தித்து, “நிருபர் சார்! இந்த மாசம் புதுமையா எல்லாம் ஏற்பாடாகி இருக்கு. அருள் அரசியார் வழக்கத்துக்கு மாறாக, ஒரு வாரம் இங்கே தங்கறாங்க. அப்புறம் திரும்பறப்போ கார்லே போகாமல், அவங்க கோஷ்டியோட பாத யாத்திரையாகவே திரும்பறாங்க. போற வழியில், ஒவ்வொரு கிராமத்திலும் அருளிசை முழக்கமும் உண்டு” என்றார்.

“இந்த நியூஸ்லே என்னய்யா புதுமை இருக்கு? ஒரு நாள் தங்கறவங்க இங்கே ஒரு வாரம் தங்கறாங்க. காரிலே திரும்பறவங்க பாத யாத்திரையாக நடந்து போகப் போறாங்க.”

“அதுதான் புதுமை சார்!”

“சரி! நியூஸை அனுப்பி வைக்கிறேன். போங்க! இந்த பஜனை நியூஸ் கூட இல்லாட்டிநான் அனுப்புறத்துக்குத்தான் இங்கே வேறே என்ன இருக்கு? போடறதும் போடாததும் அவங்க இஷ்டம்.