650 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
என்பது கர்ண பரம்பரையாக அந்த ஊர் அறிந்து வந்த உண்மை.வருடத்தில் ஒருவராவது அந்த மரத்தடியில் பலியாகத் தவறினதே இல்லை.போன ஆனி மாசம் மாலை மயங்கும் நேரத்தில் அதே இடத்தில் ரத்தம் கக்கிச் செத்த சின்னக்கருப்பனை ஊரார் மறந்துவிட முடியுமா என்ன? இப்படிப் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பரம்பரை நம்பிக்கையாலும் பிரத்யட்சத்தாலும் உண்மையான ஒன்றை இந்த நேற்றுப் பயல் முனியாண்டி நாலு கோணல் எழுத்தைப் படித்துவிட்டு மறுப்பதைச் சகிக்க முடியுமா என்ன? இதையெல்லாம்விட இயற்கையாகவே பிலாவடியார் கோவில் அமைந்திருந்த இடம் இருட்டின பிறகு போவதற்கு வசதியற்றது. இந்த நம்பிக்கை வேறு முனியாண்டிக்குத் தோல்வி என்று அவர்கள் கருத இடங் கொடுத்துக் கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் காரணமான அந்தப் பிலாவடியார் கோயில் அமைந்திருக்கும் விதத்தைச் சற்றுத் தெரிந்து கொள்ளவேண்டும். கிழக்கு நோக்கி மேல் கீழாக அமைந்த பூந்துறை கிராமம் மூன்று புறங்களிலும் குன்றுகளால் சூழப்பட்டு இருந்தது. ஊரைச் சுற்றி முத்தாரம் இட்டது போல் சிற்றாறு ஒன்று இரண்டாகப் பிரிந்து ஒடிக் கொண்டிருந்தது. இந்தச் சிற்றாறு மேற்கேயுள்ள குன்றில் உற்பத்தியாகிறது. அது பின் இரண்டாகப் பிரிந்து ஊருக்குத் தென்பகுதியில் ஒன்றும், வடபகுதியில் ஒன்றுமாகப் பாய்கிறது. இந்த ஆறு உற்பத்தியாகுமிடத்தை ஒட்டித்தான் பிலாவடியார் கோவில் அமைந்திருக்கிறது. மலைச் சரிவில் அடர்த்தியான மரக் கூட்டத்திற்கிடையே இருந்த அந்த இடத்தில் பகற்பொழுதில் வெய்யிலே நுழைய முடியாது. ஊரிலிருந்து அதற்கு ஒரு ஒற்றையடிப்பாதை உண்டு. அந்தப் பாதையின் முற்பகுதி ஒழியப் பின்னுள்ள வழி முழுவதும் அடர்த்தியான காட்டுக்கிடையே செல்லக் கூடியது. அந்த ஒற்றையடிப் பாதையை விட்டு விலகாமல் நேரே சென்றால் மூன்று மைல்களில் பிலாவடியார் கோவிலுக்கு வந்து சேரலாம். காட்டுச் சிள்வண்டுகளின் 'கீஇஇ...' என்ற ரீங்கார சப்தம் இடை விடாது ஒலிக்கும். அந்த சப்தத்தை வெற்றி கொள்வது போல் சோவென்ற இரைச்சலுடன் முப்பது அடி உயரத்திலிருந்து அருவி ஒன்று விழுந்து கொண்டிருக்கும். கோவிலுக்குப் பின்புறம் அமைந்திருந்த மலைப் பிளவிலிருந்து விழும் இந்த நீர் வீழ்ச்சியின் தண்ணீர்தான் ஊருக்குள் ஆறாக ஒடுவது. அருவி விழும் பள்ளத்தை அடுத்துச் சிறிது சம அளவான தரைப்பகுதி இருந்தது.அதன் நடுவில் ஒரு பெரிய மகிழமரம் கொப்பும் கிளையுமாக விரிந்து படர்ந்திருந்தது.காலை நேரத்தில் அந்த இடத்திற்கு வந்தால் ஒரே மகிழம்பூ மணம் மூக்கைத் துளைக்கும்.மகிழ மரத்தை ஒட்டி எப்போதோ கட்டப்பட்ட ஒரு சிறு கோவில் மதிலோடு உராய்ந்துகொண்டு வளர்ந்திருந்த ஒரு முதிர்ந்த பலாமரம். இவ்வளவுதான் குறிப்பிடத்தக்கவை. எப்பொழுதாவது கூட்டமாகச் சாமி கும்பிட வருகிறவர்கள் அடுப்பு வைத்துக் கரியேறிய குண்டுக் கற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கும். தரையில் மகிழம்பூ திரட்டுவாரற்று உதிர்ந்து கிடக்கும்.அதைத் திரட்டவோ, மூக்கில் நுகரவோ தலையிற் சூடவோ கூடாது என்பது அந்தப் பக்கத்து நியதி. யட்சிணி மோகினிகள் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது அவர்கள் பயம் ஒரு சமயம் கிராம மக்கள் சொல்வதைக் கேலிசெய்த பாரஸ்ட் ரேஞ்சு ஆபீஸர் முருகப்ப முதலியார் அனுபவித்த