126. தலைமுறை இடைவெளி
துணை வேந்தர் மிகவும் அமைதி இழந்து காணப்பட்டார். ஒரு வேலையும் ஓடாமல் பரபரப்படைந்த நிலையில் இருந்தார் அவர். காந்தளூர்ப் பல்கலைக் கழக எல்லை ஏறக்குறையப் போர்க்களம் போல ஆகியிருந்தது. விடுதிகளைக் காலி செய்து மாணவ-மாணவிகளை வெளியே அனுப்புவதா, காம்பஸுக்குள் போலீஸை வரச் சொல்வதா என்பதைப் பொறுத்துத் துணைவேந்தருக்கும் பிரபுவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.
வார்டனாகிய டாக்டர் பிரபு, இளைஞர். ஓரளவு மாணவர்களோடு நெருங்கிப் பழகுகிறவர். அந்தப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறையின் தலைவர். கலகலப்பாகவும் தாராளமாகவும் பழகும் இயல்புள்ளவர். துணை வேந்தர் குலசேகரன் இதற்கு நேர்மாறான இயல்புள்ளவர். முன் கோபி. பதற்றப்படுகிறவர். ‘இந்தத் தலை முறையிலும் இனி மேலும் படிக்க வருகிற பையன்கள் உருப்படவே மாட்டார்கள். அரசியல்வாதிகள் அவர்களைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள்’ என்று அடிக்கடி வெறுத்துச் சொல்லுகிறவர்.
“நான் அப்படி நினைக்கவில்லை ஸார்! மாணவர்களை வழிக்குக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று டாக்டர் பிரபு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துணை வேந்தரிடம் வாதாடுவார் .மாணவர்களின் கட்சியை எடுத்துச் சொல்லுவார்.
இந்த முறை ஏற்பட்ட தகராறு மிகவும் சாதாரணமாகத்தான் தொடங்கியது. ஆனால் நொடியில் மிகப் பெரிதாக வளர்ந்து விட்டது.
ஹாஸ்டல் ‘பி’ பிரிவு மெஸ்ஸில் காலைச் சிற்றுண்டியின் போது இட்டிலிக்கு வழங்கப்பட்ட சட்டினியில் எப்படியோ ஒரு கரப்பான் பூச்சி விழுந்து கலந்து, ஒரு மாணவனின் பிளேட் வரை வந்து விட்டது. மெஸ்ஸில் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை மாணவர்களும் உடனே கரப்பான் பூச்சியோடு கூடிய அந்தத் தட்டுடன் ஊர்வலமாக உணவு விடுதிக் கண்காணிப்பாளரும், பொது உறவு அதிகாரியுமாகிய பிஆர்ஓவைச் சந்திக்கப் போயிருக்கிறார்கள். இந்தப் பொது உறவு அதிகாரி யாரோ ஓர் அமைச்சருக்கு உறவினர். அதனால் தம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாதென்று இறுமாப்பாக இருப்பவர். துணை வேந்தரை விடத் தம்மை அதிகச் செல்வாக்குள்ளவராக நினைப்பவர். வறட்டுப் பிடிவாதக்காரர். விட்டுக் கொடுக்காத முரண்டு உள்ளவர்.